மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன ஓரணியில் திரண்டு 2012 இல் நடைபெற்ற சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் ‘சேவல்’ சின்னத்தில் போட்டியிட்டன.

மலையகத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் சப்ரகமுவ மாகாணத்திலிருந்து ஒரு தமிழ்ப் பிரதிநிதித்துவத்தையாவது வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கில் மூன்று கட்சிகளும் சங்கமித்ததால் ஒன்றுக்கு இரண்டாகவே கிடைத்தது.

கேகாலை மாவட்டத்திலிருந்து ஒருவரும், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து ஒருவருமாக இருவர் மாகாணசபைக்கு தெரிவானார்கள்.இதன்மூலம் ‘ஒற்றுமை’யின் அவசியத்துவமும், – முக்கியத்துவமும் உணரப்பட்டது.காலப்போக்கில் தமிழ் முற்போக்கு கூட்டணி உதயமாவதற்கு சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலும் ஒரு காரணியாக அமைந்தது எனலாம்.

தேர்தலுக்காக மலர்ந்த இந்த கூட்டணியின் பயணம் சமுகத்துக்காக தொடரும் என எதிர்ப்பார்க்கப்பட்டபோதிலும் ‘கூட்டணி உடன்பாட்டை’ காங்கிரஸ் உறுப்பினர்கள்மீறியதால் கூட்டணியும் கலைந்தது. தொழிலாளர் தேசிய சங்கம் ஏன் இணையவில்லை என்பதற்கு அக்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட விளக்கமும் சரிதான் என்பது இறுதியில் உறுதியானது.

எதுஎப்படியோ தமிழ்ப் பிரதிநிதித்துவம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியமை வெற்றிதான்.

சேவல் சின்னத்தில் போட்டியிட்ட மலையக கூட்டணிக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 14 வாக்குகளும் (3.72 வீதம்), கேகாலை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 971 வாக்குகளும் (2.44 வீதம்) கிடைக்கப்பெற்றன. சப்ரகமுவ மாகாணத்தில் மொத்தமாக 25 ஆயிரத்து 985 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் தமிழ்க் கட்சிகள் விட்டுக்கொடுப்புடனும், புரிந்துணர்வுடனும் செயற்பட்டால் இம்முறையும் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளகூடியதாக இருக்கும்.

2012 இல் உருவான கூட்டணியில் அங்கம் வகித்த ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியன, தொழிலாளர் தேசிய சங்கத்தையும் இணைத்துக்கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியாக வளர்ச்சிபெற்று நிற்கின்றது. இ.தொ.கா. அவ்வப்போது கூட்டணிகளை அமைத்தாலும் தனிவழியையே விரும்புவதை காணக்கூடியதாக உள்ளது.தற்போதைய சூழ்நிலையில் முற்போக்கு கூட்டணியும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணையுமா என்பது கேள்விக்குறியே.

ஆனாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன இணைந்து சப்ரகமுவ மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய சாத்தியமும் இருக்கின்றது. அவ்வாறு நடைபெற்றால் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும். ஏனெனில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் இவ்விரு மாவட்டங்களிலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மாகாணசபைக்கு செல்வதற்கு போதுமானது என கூறப்படுகின்றது. எனவே, ஐக்கிய மக்கள் சக்தியாககூட பயணிக்கலாம்.

பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தமது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஆனால் மாகாணசபைத் தேர்தலில் நிச்சயம் நிறுத்தும் அப்போதுதான் வாக்குகள் பிரிந்து பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் அபாயம் உள்ளது. எனவே, சமுகத்தின் நலன்கருதி காங்கிரஸ் தியாகம் செய்யுமா அல்லது முற்போக்கு கூட்டணியுடன் சப்ரமுகவயில் மட்டும் இணைந்து பயணிக்கு முன்வருமா? தமிழ் முற்போக்கு கூட்டணி எவ்வாறான தேர்தல் வியூகத்தை சப்ரகமுவ மாகாணத்தில் வகிக்கும்?

ஆர்.சனத்