இலங்கையில்  நடைபெற்றுமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான தாமரை மொட்டு கூட்டணி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளதா, கடந்த முறையைக் காட்டிலும் தமிழர்களின் அரசியல் இருப்புக்கு இம்முறை ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்பன உட்பட தமிழ்ப் பிரதிநிதித்துவம் தொடர்பில் பலகோணங்களில் கேள்விக்கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.

அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற பாராளுமன்றத்திலேயே நாட்டுக்கு தேவையான சட்டதிட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டவாக்கச்சபையின் அனுமதி – அங்கீகாரம் இல்லாமல் நாட்டில் எந்தவொரு கட்டமைப்பிலும் எளிதில் மாற்றத்தை ஏற்படுத்திவிடமுடியாது. அத்துடன், ஜனாதிபதி பதவியை வகிப்பவருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் இருந்தாலும் அவர் பாராளுமன்றத்துக்கு பொறுப்புகூறவேண்டிய நபராகவே இருப்பார்.

இவ்வாறான விடயங்களால்தான் பாராளுமன்றமும், அங்கு இருக்கவேண்டிய பிரதிநிதித்துமும் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.குறிப்பாக தமது சமூகம் சார்ந்து முன்வைக்கப்படும் ஏதேனுமொரு சட்டமூலத்தில் குறைப்பாடுகள் இருப்பின் அவற்றை சுட்டிக்காட்டவும், அநீதி இழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதனை தட்டிக்கேட்டு – நீதிக்காக குரல் எழுப்புவதற்கு எமக்கான பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்தில் கட்டாயம் இருக்கவேண்டும்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையைப்பெற்று 25 தமிழ் வேட்பாளர்கள் பாராளுமன்றம் தெரிவானார்கள்.தமிழரசுக்கட்சிக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்கள், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு ஆகியவற்றால் 8 ஆவது பாராளுமன்றத்தில் மொத்தமாக 28 தமிழ்ப் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர்.

இம்முறை 9ஆவது பாராளுமன்றத்துக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் மக்களின் அங்கீகாரத்துடன் 25 உறுப்பினர்கள் அதிஉயர் சபைக்கு தெரிவாகியுள்ளனர்.தேசியப்பட்டியல் ஊடாகவும் மூவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 28 ஆக உள்ளது.

முன்னாள் தமிழ் எம்.பிக்கள் 10 பேர் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர். இவர்களில் எட்டுபேர் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் களமிறங்கியிருந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது. மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் எம்.பிக்கள் இருவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாவட்டம் 

தமிழர்களின் இதயமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் கருதப்படும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 அரசியல் கட்சிகளில் இருந்து 190 பேரும், 14 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 140 பேருமாக மொத்தம் 330 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.

11 தேர்தல் தொகுதிகளில் இருந்து வாக்களிப்பதற்கு 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் தகுதிபெற்றிருந்த நிலையில் 3 லட்சத்து 94 ஆயிரத்து 136 பேரே வாக்களித்திருந்தனர்.அதிலும் 35 ஆயிரத்து 6 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதன்படி 3 லட்சத்து 59 ஆயிரத்து 130 வாக்குகளே ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 967 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம்பிடித்த இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு மூன்று ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. 55 ஆயிரத்து 303 வாக்குகளைப்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், 49 ஆயிரத்து 373 வாக்குகளைப்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 45 ஆயிரத்து 797 வாக்குகளைப்பெற்ற ஈ.பி.டி.பி. மற்றும் 35 ஆயிரத்து 927 வாக்குகளைப்பெற்ற தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியன தலா ஒரு ஆசனம் வீதம் கைப்பற்றின.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 577 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியில் இம்முறை வீழ்ச்சி ஏற்பட்டதால் 2 ஆசனங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்தமுறை 15 ஆயிரத்து 22 வாக்குகளைப்பெற்று ஓர் ஆசனத்தையேனும் வெல்லாமல் மாவட்டத்தில் ஐந்தாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கான வாக்கு கட்டமைப்பில் இம்முறை எழுச்சி – வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றன. 2015 இல் 5வீத வாக்குகளைப்பெற்றிருந்த அக்கட்சி 2020 இல் 15.40 சதவீத வாக்குகளுடன் மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

அத்துடன், தமிழ் காங்கிரசுக்கு ஓர் தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைத்துள்ளது. மாற்று அரசியல் தளத்தில் இது ஓர் திருப்பு முனையாக பார்க்கப்படுகின்றது.

2015 இல் 30 ஆயிரத்து 232 வாக்குகளைப்பெற்று ஓர் ஆசனத்தை கைப்பற்றிய ஈ.பி.டிபி. இம்முறை 45 ஆயிரத்து 797 வாக்குகளைப்பெற்று இருப்பை தக்கவைத்துக்கொண்டாலும் மாவட்டத்தில் நான்காம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் வன்னியிலும் அக்கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்துள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 2015 இல் யாழ். மாவட்டத்தில் 5.76 வீத வாக்குகளைப்பெற்றிருந்தாலும் ஆசனம் கிடைக்கவில்லை. எனினும், இம்முறை அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழில் தனித்து களமிறங்கிய சுதந்திரக்கட்சி 13.75சதவீத வாக்குகளைப்பெற்று மூன்றாம் இடத்துக்கு முன்னேறி ஆசனமொன்றையும் வென்றுள்ளது.  அங்கஜன் பெற்றுக்கொடுத்த இந்த வெற்றியே 67 வருடகால பழமைவாய்ந்த சுதந்திரக்கட்சிக்கு, பாராளுமன்றத்தில் தனிக்கட்சிக்கான அங்கீகாரத்தைகூட பெற்றுக்கொடுத்துள்ளது.

விக்கேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம் அணியினரின் சங்கமத்துடன் உதயமான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, கன்னி தேர்தலிலேயே 35 ஆயிரத்து 927 வாக்குகளுடன் ஓர் ஆசனத்தை வென்றுள்ளது.அக்கூட்டணியின் சார்பில் முன்னாள் முதலவர் விக்னேஸ்வரன் பாராளுமன்றம் செல்லவுள்ளார்.

2015 இல் 20 ஆயிரத்து 25 வாக்குகளைப்பெற்று ஓர் ஆசனத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக்கட்சிக்கு இம்முறை யாழ்ப்பாணத்திலும் பேரிடிவிழுந்தது.13 ஆயிரத்து 71 வாக்குகளைப்பெற்று எம்.பியான விஜயகலா மகேஷ்வரனுக்கு இம்முறையும் எம்.பியாகும் கனவு நனவாகவில்லை.

தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ்.மாவட்டத்தில் விருப்பு வாக்கு பட்டியலில் முதலிடம் பிடித்த எஸ். சிறிதரன் 35 ஆயிரத்து 884 வாக்குகளைப்பெற்றார்.கடந்தமுறை 72 ஆயிரத்து 58 வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

2015 பொதுத்தேர்தலில் 58 ஆயிரத்து 43 வாக்குகளைப்பெற்ற எம்.ஏ. சுமந்திரன் இம்முறை 27 ஆயிரத்து 834 வாக்குகளையும், கடந்தமுறை 53 ஆயிரத்து 740 வாக்குகளைப்பெற்ற த. சித்தார்த்தன் இம்முறை 23 ஆயிரத்து 840 வாக்குகளையும்பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா 20 ஆயிரத்து 358 வாக்குகளை பெற்றிருந்தாலும் அவரால் வெற்றிபெறமுடியவில்லை.2015 பொதுத்தேர்தலின்போது 58 ஆயிரத்து 782 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை மாவை பிடித்திருந்தார்.

20 ஆயிரத்து 392 விருப்பு வாக்குகளைப்பெற்ற சரவணபவனுக்கும் பாராளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. சென்றமுறை 43 ஆயிரத்து 289 வாக்குகளைப்பெற்றிருந்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு 31 ஆயிரத்து 658 வாக்குகள் கிடைத்தன. 2010,2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களின்போது அவரால் வெற்றிபெறக்கூடியதாக இருக்கவில்லை.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் கடந்தமுறை தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பளிக்கப்பட்ட அங்கஜன் இராமநாதன் 36 ஆயிரத்து 365 விருப்பு வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவரின் இந்த வெற்றியால் சுதந்திரக்கட்சிக்கும் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற அந்தஸ்த்து கிடைத்துள்ளது. அதாவது பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கான சகல வரப்பிரதாசங்களும் கிடைக்கும். களுத்துறை, நுவரெலியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டது. எனினும், களுத்துறை, நுவரெலியா மாவட்டங்களில் அக்கட்சி வெற்றிபெறவில்லை. ஒரு வீதத்துக்கும் குறைவான வாக்குகளே கிடைக்கப்பெற்றுள்ளது.

ராஜபக்சவின் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ள டக்ளஸ் தேவானந்தா 32 ஆயிரத்து 146 வாக்குகளையும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் 21 ஆயிரத்து 554 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். சிவிக்கு இது முதலாவது பாராளுமன்றத் தேர்தலாகும். டக்ளஸ் கடந்தமுறை 16 ஆயிரத்து 399 விருப்பு வாக்குகள் பெற்றிருந்த நிலையில் இம்முறை அவருக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது.

வன்னி மாவட்டம்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 ஆசனங்களை இலக்குவைத்து 17 அரசியல் கட்சிகளில் இருந்தும், 28 சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் மொத்தம் 405 பேர் போட்டியிட்டனர். இவர்களில் அறுவரை தெரிவு செய்வதற்காக 2 லட்சத்து 87 ஆயிரத்து 24 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 2 லட்சத்து 24 ஆயிரத்து 856 பேரே வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.17 ஆயிரத்து 19 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு, மொத்தமாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 837 வாக்குகள் செல்லுபடியாகின.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 89 ஆயிரத்து 886 வாக்குகளைப்பெற்று 2015 இல் நான்கு ஆசனங்களை தம்வசப்படுத்திய தமிழரசுக்கட்சிக்கு இம்முறை 69 ஆயிரத்து 916 வாக்குகளே கிடைக்கப்பெற்றன.இதனால் ஓர் ஆசனத்தை வன்னியில் இழக்கவேண்டிய நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

42 ஆயிரத்து 524 வாக்குகளைப்பெற்ற பொதுஜன பெரமுன, 37 ஆயிரத்து 883 வாக்குகளைப்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி, 11 ஆயிரத்து 310 வாக்குகளைப்பெற்ற ஈ.பி.டி.பி. ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம் வீதம் பகிரப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வன்னியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

சார்ள்ஸ் நிர்மலநாதன் 25 ஆயிரத்து 668 விருப்பு வாக்குகளையும், செல்வம் அடைக்கலநாதன் 18 ஆயிரத்து 563 விருப்பு வாக்குகளையும் வினோநோகராத லிங்கம் 15 ஆயிரத்து 190 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் தெரிவாகியுள்ளனர்.

கூட்டமைப்பின் சார்பில் 2015 இல் போட்டியிட்டு 25 ஆயிரத்து 27 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்ற சிவசக்தி ஆனந்தன், இம்முறை விக்னேஸ்வரன் அணியில் இணைந்து போட்டியிட்ட நிலையில் தோல்வியடைந்துள்ளார். கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஊடாக கடந்தமுறை தெரிவான சாந்தி சிறீஸ்கந்தராஜாவும் தோல்வியடைந்துள்ளார். இருந்தாலும் 11 ஆயிரத்து 710 வாக்குகளைப்பெற்றுள்ளார்.

ஈ.பி.டிபியின் சார்பில் களமிறங்கிய குலசிங்கம் திலீபன் 3 ஆயிரத்து 203 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். இம்முறையே அவர் பாராளுமன்றம் செல்கின்றார்.அதாவது புதுமுக எம்.பி.

2015 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியில் ஈ.பி.டிபி. 2 ஆயிரத்து 120 வாக்குகளை மாத்திரமே பெற்றது. ஆனால் இம்முறை 11 ஆயிரத்து 310 வாக்குகளைப்பெற்று வன்னிலும் கால்பதித்துள்ளது.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி 8 ஆயிரத்து 789 வாக்குகளையும், தமிழ் காங்கிரஸ் 8 ஆயிரத்து 232 வாக்குகளைப்பெற்றிருந்தாலும் 5வீதம் என்ற இலக்கை தாண்டவில்லை.கடந்தமுறை தமிழ் காங்கிரசுக்கு ஆயிரத்து 174 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பெற்ற நிலையில், இம்முறை பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் வன்னிலும் அதன் செல்வாக்கு அதிகரித்திருப்பதை அறிந்துகொள்ளகூடியதாக இருக்கின்றது. வன்னி மாவட்டத்தில் இருந்து புதியவர் ஒருவர் பாராளுமன்றம் வருகின்றார். ஏனையோர் முன்னாள் எம்.பிகளாவர்.

மட்டக்களப்பு மாவட்டம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாவட்டமாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கோட்டையெனவும் விளிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழரசுக்கட்சி தலைமையிலான கூட்டமைப்புக்கு இம்முறை பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இம்மாவட்டத்தில் 53.25 சதவீத வாக்குகளைப்பெற்று (127,185) மூன்று ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழரசுக்கட்சிக்கு, பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்காணப்பட்டபோதிலும் இம்முறை 26.66 சதவீத (79,460) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்துள்ளது.கடந்த முறையுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வாக்கு வங்கிவங்கி 26.59 வீதத்தால் சரிந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் தற்போது சிறைதண்டனை அனுபவித்துவருபவருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசன்துரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தேர்தலில் வெற்றி நடைபோட்டுள்ளது. 22.71 சதவீத (67,992) வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைபிடித்து ஆசனமொன்றையும் கைப்பற்றியுள்ளது.

சிறைக்குள் இருக்கும் பிள்ளையானுக்கு 52 ஆயிரத்து 192 பேர் வாக்களித்து மாவட்டத்தில் முதலாமிடம் வழங்கி அழகுபார்த்துள்ளனர்.
தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களான சாணக்கியன் 33 ஆயிரத்து 332 வாக்குகளையும், கோவிந்தன் கருணாகரன் 26 ஆயிரத்து 382 வாக்குகளைப்பெற்று புதுமுக எம்.பிக்களாக பாராளுமன்றம் சென்றுள்ளனர்.

கூட்டமைப்பின் எம்.பிக்களாக இருந்துபோட்டியிட்ட யோகேஸ்வரன் 13 ஆயிரத்து 626 வாக்குகளையும், எஸ். ஶ்ரீநேசன் 25 ஆயிரத்து 303 விருப்பு வாக்குகளையும்பெற்று தோல்வியடைந்துள்ளனர். 2015 பொதுத்தேர்தலில் யோகேஸ்வரன் 34 ஆயிரத்து 49 வாக்குகளையும், ஶ்ரீநேசன் 48 ஆயிரத்து 821 வாக்குகளையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டு 39 ஆயிரத்து 321 வாக்ககளைப்பெற்று 2018 இல் மஹிந்த பக்கம்தாவிய எஸ். வியாழேந்திரன் இம்முறை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் களம்கண்டார். 22 ஆயிரத்து 218 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். தற்போது இராஜாங்க அமைச்சராகவும் செயற்படுகின்றார்.

கூட்டமைப்புக்கான ஓர் ஆசனம் குறைந்திருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து நான்கு தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை ஆறுதல் அளிப்பதாக அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்தமுறை மூவர் மாத்திரமே சபைக்கு சென்றிருந்தனர்.

திருகோணமலை மாவட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் அரசியல் கோட்டையாக விளங்கும் திருகோணமலை மாவட்டத்தில் தனது அரசியல் இருப்பை இம்முறையும் தமிழரசுக்கட்சி தக்கவைத்துக்கொண்டுள்ளது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 25.44 சதவீத (45,894) வாக்குகளைப்பெற்ற தமிழரசுக்கட்சி இம்முறை திருமலை மாவட்டத்தில் 18.58 வீத (39,570) வாக்குகளையே பெற்றுள்ளது. வாக்கு வீதம் வீழ்ச்சி கண்டிருந்தாலும் 21 ஆயிரத்து 422 வாக்குகளைப்பெற்று சம்பந்தன் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். கடந்தமுறை 33 ஆயிரத்து 834 விருப்பு வாக்குகளை அவர் பெற்றிருந்தார்.

கடந்தமுறை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம்வந்திருந்த துரைரட்ணசிங்க இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கான வாய்ப்பே சண்முகம் குகதாசனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. 3 ஆயிரத்து 755 வாக்குகளையும் தமிழ் காங்கிரஸ் 2 ஆயிரத்து 745 வாக்குகளையும் பெற்றன.

அம்பாறை மாவட்டம்

அம்பாறை மாவட்டத்தில் ஒரு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கடந்த காலங்களில் பாதுகாக்கப்பட்டுவந்த நிலையில் இம்முறை அது இல்லாமல்போயுள்ளது. 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 17 ஆயிரத்து 779 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்ற கவிந்தன் கோடிஸ்வரன் இம்முறை தோல்வியடைந்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் 2015 இல் 13.92 சதவீத (45,421) வாக்குகளைப்பெற்ற தமிழரசுக்கட்சி 2020 பொதுத்தேர்தலில் 6.54 வீத (25,255) வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளது.

கருணா அம்மான் தலைமையில் களமிறங்கிய அகில இலங்கை தமிழ் மகா சபா 7.61 சதவீத ( 29,379) வாக்குகளைப்பெற்றது. தமிழரசுக்கட்சிக்கான வாக்குகளே பெரும்பாலும் கருணா பக்கம் சென்றது. இவ்வாறு இரு தரப்புக்கும் தமிழர்கள் வாக்களித்ததால் வாக்குகள் சிதறி இருந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் போயுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் ஈ.பி.டிபிக்கு 582 வாக்குகளும், தமிழ் காங்கிரசுக்கு 283 வாக்குகளுமே கிடைக்கப்பெற்றன.

மலையகம் –
நுவரெலியா மாவட்டம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் தமிழ் மக்கள் செறிந்துவாழும் மாவட்டமாக நுவரெலியா விளங்குகின்றது. 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றின்போது இம்மாவட்ட மக்கள் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியையே ஆதரித்து அமோக வெற்றிபெறவைத்தனர்.

ஆனால் 2020 பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி 2 லட்சத்து 30 ஆயிரத்து 339 வாக்குகளைப்பெற்று, ஐந்து ஆசனங்களுடன் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகே நுவரெலியாவின் ஆதரவு மாற்று தரப்பு கைகளுக்குள் சென்றுள்ளது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து ஐந்து தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியிருந்தனர். இம்முறையும் ஐந்து தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதிகரித்துக்கொள்வதற்கு இருந்த வாய்ப்பு நழுவவிடப்பட்டுள்ளது. இதனால் மொட்டு கட்சியின்சார்பில் போட்டியிட்ட மூன்று சிங்கள வேட்பாளர்களும் வெற்றிபெற்று சபைக்கு தெரிவாகியுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஐந்து வேட்பாளர்களை நிறுத்தாமல் மூவரை மாத்திரம் களமிறக்கியிருந்தால் தமிழ்ப் பிரதிநிதித்துவம் 6 ஆக அதிகரித்திருக்ககூடும். திட்டமிட்ட வியூகம் இன்மையாலேயே வெற்றி கைவசம் இருந்தும் அது கை நழுவிபோயுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் தலைமை வேட்பாளராக களமிறங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 155 வாக்குகளைப்பெற்று நுவரெலியா மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவர் பெற்றி அதிகூடிய விருப்பு வாக்கு என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இ.தொ.காவின் மற்றுமொரு வேட்பாளரான மருதபாண்டி ராமேஷ்வரன் 57 ஆயிரத்து 902 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். இ.தொ.காவின் ஏனைய வேட்பாளர்களான கணபதி கணகராஜ், சக்திவேல், பிலிப்குமார் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் மூவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

இதன்படி திகாம்பரம் 83 ஆயிரத்து 392 வாக்குகளையும், வீ. இராதாகிருஷ்ணன் 72 ஆயிரத்து 167 வாக்குகளையும், எம். உதயகுமார் 68 ஆயிரத்து 119 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் செல்வதற்கு மக்கள் அங்கீகாரம் பெற்றுள்ளனர்.

ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஷ்வரன், உதயகுமார் ஆகிய மூவரும் முதன்முறையாக பாராளுமன்றம் சென்றுள்ளனர்.

கடந்தமுறை பாராளுமன்ற உறுப்பினராக அங்கம் வகித்த எம். திலகராஜ் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.அவரின் பெயர் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2015 பொதுத்தேர்தலில் 67 ஆயிரத்து 761 விருப்பு வாக்குகளை திலகர் பெற்றிருந்தார்.

அத்துடன், 2015 இல் 45 ஆயிரத்து 352 வாக்குகளைப்பெற்று இ.தொ.காவின் சார்பில் பாராளுமன்றம்சென்ற முத்துசிவலிங்கம் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை. இ.தொ.காவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தாலும் மாரடைப்பால் அகால மரணமடைந்தார். அவரிடன் இடத்திலேயே அவரின் மகனான ஜீவன் போட்டியிட்டு சாதனை வெற்றியை பதிவுசெய்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் எம்.பிக்களான நவீன் திஸாநாயக்க, கே.கே. பியதாச ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கி சுமார் 17 ஆயிரம் வாக்குகளைப்பெற்று பாராளுமன்றம் தெரிவாகாவிட்டாலும், எதிர்கால அரசியலுக்கு அடித்தளமிட்டுள்ளார் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் புதல்வியான அனுசா சந்திரசேகரன்.

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்றிருந்தாலும் சபைக்கு தெரிவாகவில்லை.

நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களை இலக்கு வைத்து 12 அரசியல் கட்சிகளில் இருந்து 132 பேரும், 13 சுயேட்சைக்குழுக்களில் இருந்து 143 பேரும் களமிறங்கினர். இதில் இரு பிரதான கட்சிகளைதவிர வேறுஎந்தவொரு அணியும் 5வீதத்துக்கும் மேல் வாக்குகளைப்பெறவில்லை.

5 லட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தாலும் 4 லட்சத்து 65 ஆயிரத்து 25 பேரே வாக்களித்திருந்தனர். அதிலும் 42 ஆயிரத்து 48 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

கண்டி மாவட்டம் 

கண்டி மாவட்டத்தில் பலமுனைப்போட்டிகளுக்கு மத்தியிலும் இம்முறையும் தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தக்கவைத்துக்கொள்ளப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட வேலுகுமார் 57 ஆயிரத்து 445 வாக்குகளைப்பெற்று இரண்டாவது முறையும் பாராளுமன்றம் தெரிவாகியுள்ளார்.

சுமார் ஒரு லட்சம் தமிழ் வாக்காளர்கள் வாழும் கண்டி மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதென்பது சவாலுக்குரிய விடயமாகும்.

இலங்கையில் 1947 இல் தொகுதிவாரியாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் கண்டி மண்ணிலிருந்து இரண்டு தமிழ்ப் பிரதிநிதிகள் பாராளுமன்றம் சென்றிருந்தனர். எனினும், 1948 இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் 4 தசாப்தங்களுக்கு மேலாக கண்டி மாவட்ட தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட இராஜரட்னம் வெற்றிபெற்றார். அதன்பின்னர் 2000, 2001, 2004, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ் வேட்பாளர் எவரும் வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் 2015 இல் நடைபெற்ற தேர்தலில் ஐ.தே.கவின் பட்டியலில் போட்டியிட்ட  வேலுகுமார் 62 ஆயிரத்து 556 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். இதன்மூலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு கண்டி மாவட்டத்துக்கு மீண்டும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தது.

எனினும், அப்பிரதிநிதித்துவத்தை இம்முறை தக்கவைத்துக்கொள்ளமுடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. ஏனெனில் மூன்று தேசிய கட்சிகளின் சார்பில் தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருந்தனர். இதனால் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு, பிரதிநிதித்துவம் இல்லாமல்போகும் அபாயம் காணப்பட்டது. எனினும், கண்டி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம் மக்கள், மூன்றாவது விருப்பு வாக்கை தமிழ் வேட்பாளருக்கு வழங்கியதால் வெற்றி சாத்தியமானது.  மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிட்ட இ.தொ.காவின் வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகளைப்பெற்றிருந்தார்.

பதுளை மாவட்டம்

பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் 288 பேர் பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் சுமார் 60 தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தாலும் இருவரே வெற்றிக்கனியை ருசித்துள்ளனர்.

6 லட்சத்து 68 ஆயிரத்து 166 பேர் வாக்களிக்க தகுதிபெற்றிருந்தாலும் 5 லட்சத்து 37 ஆயிரத்து 416 பேரே வாக்குரிமையைப் பயன்படுத்தினர். 38 ஆயிரத்து 621 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

62.06 சதவீத வாக்குகளுடன் பதுளை மாவட்டத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கைப்பற்றி 6 ஆசனங்களை வென்றாலும் அவ்வணியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளரான செந்தில் தொண்டமான் வெற்றிபெறவில்லை. அவர் சுமார் 36 ஆயிரம் வாக்குகளை எடுத்திருந்தார். செந்தில் தொண்டமான் எதிர்கொண்ட முதலாவது பொதுத்தேர்தல் இதுவாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட வடிவேல் சுரேஷ், அரவிந்தகுமார் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.வடிவேல் சுரேஷ் 49 ஆயிரத்து 762 விருப்பு வாக்குகளையும், அரவிந்தகுமார் 45 ஆயிரத்து 491 விருப்பு வாக்குகளையும் பெற்றுள்ளனர். பதுளை மாவட்ட தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இம்முறையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியின் சார்பில் ஒருவர் தெரிவாக வாய்ப்பிருந்தும் சுயேட்சைக்குழுக்களுக்கு தமிழ் வாக்குகள் சென்றதால் அது இல்லாமல்போனது.

தலைநகரம் கொழும்பில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் இருந்தும் இம்முறையும் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள பெரும்பாடுபடவேண்டியதாக இருந்தது. அதுவும் பட்டியலில் இறுதி இடத்திலேயே மனோ கணேசன் தெரிவாகியுள்ளார்.

62 ஆயிரத்து 91 விருப்பு வாக்குகளைப்பெற்றுள்ளார். 2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் 69 ஆயிரத்து 64 வாக்குகளைப்பெற்றிருந்தார். மனோவுடன் இணைந்து போட்டியிட்ட ஜனகன், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் ராம் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர். மொட்டு கட்சியின்சார்பில் கொழும்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களும் களமிறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இரத்தினபுரி, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட அனைத்து தமிழ் வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். இதில் இரத்தினபுரி மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஒரு பிரதிநிதியை தெரிவுசெய்வதற்கு வாய்ப்பிருந்தும் அது தொடர்ச்சியாக கைவிடப்பட்டுவருகின்றது. தமிழ், முஸ்லிம் மக்கள் தமிழ் பேசும் சமூகமாக ஓரணியில் திரண்டால் வெற்றி நிச்சயம்.

குறிப்பாக இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 9 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் வாக்குகளாலேயே தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்தும் கைநழுவிப்போனது. எனவே, தமிழ் மக்கள் செறிந்து அல்லாமல் சிறுபான்மையாக வாழும் இம்மாவட்டங்களில் இனிவரும் காலப்பகுதியிலானது வாக்குரிமையின், தமக்கான பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து மக்கள் வாக்களிக்கவேண்டும். அதேபோல் சுயேட்சையாக போட்டியிடுபவர்களும் தமக்கான வெற்றி வாய்ப்பு குறித்து சிந்தித்து தெளிவுபெறவேண்டும்.

ஏனெனில் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்கள் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களாகும். அங்கு பலர் போட்டியிட்டாலும் பிரதிநிதித்துவத்துக்கு பெரும் இழப்பு ஏற்படாது. ஆனால், கண்டி, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் மாவட்டங்களாகும். எனவே, இம்மாவட்டங்களில் வாழ்பவர்கள் பொறுப்புடனும், சமூகத்தின் நலன்கருதியும் செயற்படவேண்டும். கொழும்பில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் வாக்காளர்கள் அனைவரும் உரிய வகையில் வாக்களித்திருந்தால் இரட்டை பிரதிநிதித்துவத்தை வென்றிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.சனத்