இரத்தினபுரி மாவட்டத்தில் பிரபல அரசியல்வாதிகளே பின்னடைவை சந்தித்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் கடந்த முறையை விடவும் அதிகளவிலான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாக கொடகவலை பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினரான அண்ணாமலை போதிமாதவன் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதித்துவம் மீண்டும் கேள்விக்குரியாகியுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட சந்திரகுமார் 29 ஆயிரத்து 958 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், இந்த முறை தேர்தலில் சந்திரகுமார் 36473 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் வெற்றி பெற்ற போதிலும், அவர்களின் வாக்கு வங்கி கடந்த முறையை விடவும் இந்த முறை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் போதிமாதன் கூறியுள்ளார்.

எனினும், இரத்தினபுரி தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட சந்திரகுமாரின் வாக்குவங்கி இந்த முறை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்திற்கு ஏற்கனவே மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ள நிலையில், தேசிய பட்டியல் உறுப்புரிமையும் நுவரெலியா மாவட்டத்திற்கே கிடைக்கும் சாத்தியம் தற்போது ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரியில் கவனிப்பாரற்று காணப்படும் தமிழர்களுக்கான உரிமைகளை கருத்திற் கொண்டு, தேசிய பட்டியல் மூலம் கிடைக்கும் ஒரு ஆசனத்தையேனும் இரத்தினபுரிக்கு வழங்க தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையகத்தின் ஏனைய பகுதிகளுக்கு மக்கள் பிரநிதிகள் இருக்கின்ற நிலையில், இரத்தினபுரிக்கு ஒரு தமிழ் மக்கள் பிரதிநிதி கூட கிடையாது என்பது வருத்தமானது எனவும் அவர் கூறினார்.

இதனால், இரத்தினபுரி மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவத்தை வழங்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுக்குமா எனவும் கொடகவலை பிரதேச சபையின் தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினரான அண்ணாமலை போதிமாதவன் கோரிக்கை விடுக்கின்றார்.