ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களை எதிரியாகவே பார்த்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

பலாங்கொடை – பெட்டிகலை பகுதியில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சஜித் பிரேமதாஸவின் தந்தையான ரணசிங்க பிரேமதாஸ, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் கொலை செய்யப்பட்டதை அவர் இதன்போது நினைவூட்டினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ கொலை செய்யப்பட்டமையானது, ஒரு அரசியல் படுகொலை என கூறிய அவர், அதனை ஒட்டு மொத்த தமிழ் சமூகமே பொறுப்பேற்க முடியாது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனது தந்தையை தமிழ் மக்களே கொலை செய்தார்கள் என்ற எண்ணத்துடன் சஜித் பிரேமதாஸ தொடர்ந்து செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்தமைக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிராக செயற்பட்டு வருகின்றதை போன்றே, சஜித் பிரேமதாஸவும் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான ஒருவர், ஆட்சி பீடத்திற்கு ஏறும் பட்சத்தில் தமிழ் சமூகமே அடிமைகளாக வாழ வேண்டிய நிலைமை ஏற்படும் என எஸ்.ஆனந்தகுமார் கவலை வெளியிட்டார்.

அதனால், தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களிப்பதன் ஊடாக, தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, பெரும்பான்மை சமூகம் அதிகளவில் வாழும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை அந்த பெரும்பான்மை சமூகமே தோல்வியடைய செய்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தலை எதிர்கொண்ட சஜித் பிரேமதாஸவிற்கு தமிழ் மக்கள் முழுமையாக ஆதரவை வழங்கியிருந்த பின்னணியில், அவர் அந்த தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், வாக்களித்த தமிழ் மக்களுக்கு இன்று வரை நன்றி தெரிவிக்கவில்லை எனவும் ஆனந்தகுமார் கவலை வெளியிட்டார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நன்மதிப்பை வென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வழியை மீறி செயற்பட்ட சஜித் பிரேமதாஸ, தற்போது மீண்டும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனங்களை வெல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கியை அதிகரித்து கொள்ளும் முயற்சிகளை சஜித்; பிரேமதாஸ தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பெரும்பான்மை சமூகம் அதிகளவில் வாழும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில், பெரும்பான்மை மக்களே அவரை புறக்கணித்த நிலையிலேயே, சிறுபான்மை சமூகம் அதிகளவில் வாழும் கொழும்பு மாவட்டத்தை நோக்கி சஜித் பிரேமதாஸ நகர்ந்துள்ளதாகவும் ஆனந்தகுமார் குறிப்பிடுகின்றார்.

இதன்போது, சஜித் பிரேமதாஸ தமிழ் மக்களை புறக்கணிப்பதற்கான சில உதாரணங்களையும் மக்கள் மத்தியில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

மலையக தமிழர்களின் பெரும் தலைவரான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மரணத்தை அறிவிக்க சென்ற முன்னாள் அமைச்சர் மனோ கணேஷனை சந்திக்க கூட சஜித் பிரேமதாஸ மறுத்திருந்ததாகவும் ஆனந்தகுமார் சுட்டிக்காட்டினார்.

சஜித் பிரேமதாஸவை தான் கையோடு அழைத்து வருவதாக சென்ற மனோ கணேஷன், மீண்டும் மரண வீட்டிற்கு தனியாகவே வருகைத் தந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்திய வம்சாவளித் தமிழர்களின் தலைவர் என கூறிக் கொள்ளும் மனோ கணேஷனையே புறக்கணித்த சஜித் பிரேமதாஸ, தான் பெரும்பான்மை இனத்தவர் என்ற நிலைப்பாட்டில் தனியாகவே ஆறுமுகன் தொண்டமானின் மரண வீட்டிற்கு வருகைத் தந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிறுபான்மை சமூகத்தின் தலைவராக கூறிக் கொள்ளும் மனோ கணேஷனுடன் வருகைத் தர மறுத்த சஜித் பிரேமதாஸ, எவ்வாறு தமிழ் மக்களுக்காக முன்னின்று செயற்படுவார் என எஸ்.ஆனந்தகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழர்கள் எதிர்காலத்தை சிந்தித்து சரியான தலைமைத்துவத்திற்கு நிகழ்காலத்தில் வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.