மலையக தமிழர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படாதுள்ளமையானது, பெரும்பான்மை சமூகத்தின் சூழ்ச்சி என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு வாக்களிக்க தேசிய அடையாளஅட்டை கிடையாது என வெளியாகியுள்ள செய்தியை அடுத்தே, எஸ்.ஆனந்தகுமார் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

பெரும்பாலான தமிழ் மக்கள் யானை சின்னத்திற்கே வாக்களித்து வருகின்ற நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த பெரும்பான்மையினர் அதனை தடுத்து நிறுத்த இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய அடையாளஅட்டை தமிழர்களுக்கு வழங்காது, தமிழர்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளை பெரும்பான்மையைச் சேர்ந்த எதிர்க்கட்சியினர் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய அடையாளஅட்டைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய அனுமதிக்கப்பட்ட அடையாளஅட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என ஆனந்தகுமார் தமிழர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் நேற்று (30) பிரசார நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டார்.

காஹவத்தை, புங்கிரிய, ஹவுப்பே, எந்தானை, நிவித்திகல, கரவிட்ட, நிரிஎல்ல உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்ற எஸ்.ஆனந்தகுமார், அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இந்த நிலையில், நிவித்திகல – நிரிஎல்ல பகுதியில் முள் தேங்காய் செய்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானித்த எஸ்.ஆனந்தகுமார், அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

முள் தேங்காய் செய்கையை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி வாக்குறுதிகளை வழங்கியுள்ள நிலையில், தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தொடர்ந்தும் முள் தேங்காய் செய்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முள் தேங்காய் செய்கையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் வலியுறுத்தினார்.