பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுத்தேர்தலுக்கான திகதியும் (ஏப்ரல் – 25), பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் திகதியும் ( மே 14) அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் திகதி குறிப்பிடாமல் தேர்தலை, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஒத்திவைத்தார். அதன்பின்னர் திகதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது முறையும் தேர்தல் பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் 9ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவித்தலை ஜனாதிபதி இன்னும் வர்த்தமானிமூலம் அறிவிக்கவில்லை. விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.  (கொரோனா பிரச்சினை ஏற்பட்டிருக்காவிட்டால் ஜனாதிபதியால் மார்ச் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் ஏற்பாடுகள் இடம்பெற்றிருக்கும்.

எதுஎப்படியிருந்தாலும் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் நடைமுறைகள் பற்றி பார்ப்போம்.இலங்கை ஜனநாயக சோஸலிஷக் குடியரசின் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதல் நாள் அமர்வன்று, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளும், தேசியப்பட்டியல்மூலம் நியமிக்கப்பட்டவர்களும் சபைக்கு வருவார்கள்.

( பாராளுமன்றம் கூடும் முதல்நாளில் குறித்தொதுக்கப்பட்ட ஆசனத்தில்தான் உறுப்பினர்கள் அமரவேண்டும் என்பது கட்டாயமில்லை)அதன்பின்னர் கூட்டத்தினை கூட்டுவது குறித்தான ஜனாதிபதியின் பிரகடனத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் வாசித்த பின்னர், முதலில் சபாநாயகர் தேர்வு நடைபெறும்.சபாநாயகர் தேர்வு

எப்படி நடக்கும்?சட்டவாக்க சபையான பாராளுமன்றத்தில் சர்வபலம் படைத்த நபராக சபாநாயகரே திகழ்வார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் இவரே பொறுப்புமிக்கவராக விளங்குவார்.ஜனநாயகத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் சபாநாயகர் பதவிக்கு அனுபவம்மிக்க – கண்ணியமான உறுப்பினர் ஒருவர் தெரிவுசெய்யப்படவேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

அப்போதுதான் அவைக்குள்ளும் ஜனநாயகம் கோலோச்சும்.சபாநாயகர் பதவிக்கு உறுப்பினர் ஒருவரின்பெயரை முன்மொழிவதற்கு, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தீர்மானித்திருந்தால் முன்கூட்டியே அவரின் ஒப்புதலை பெற்றிருக்கவேண்டும்.

அவ்வாறு அனுமதி இல்லாமல் பிரேரிக்க மடியாது.அனுமதி பெற்றிருந்தால் நாடாளுமன்றசெயலாளரை விளித்து, குறித்த நபரை சபாநாயகராக தெரிவுசெய்யுமாறும், நாடாளுமன்றத்தின் அக்கிராசனத்தில் அமரும்படி பிரேரித்தல் வேண்டும்.

இந்த முன்மொழிவை மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.(கடந்த பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு கருஜயசூரியவின் பெயரை ரணில் விக்கிரமசிங்க முன்மொழிய அதனை நிமல் சிறிபாலடி சில்வா வழிமொழிந்தார்.)

இவ்வாறு ஒரு உறுப்பினரின் பெயர்மாத்திரம் முன்மொழியப்பட்டால் குறித்த நபரே சபாநாயகராக, நாடாளுமன்ற செயலாளரால் அறிவிக்கப்படுவார்.அதன்பின்னர் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் சபாநாயகராக தெரிவானவரை அழைத்துச்சென்று சபாபீடத்திலுள்ள அக்கிராசனத்தில் அமரவைக்கவேண்டும்.

சபாநாயகர் பதவிக்கு இரண்டு உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். இருவரும் சமனான வாக்குகளைப் பெற்றால் , தெரிவுக்காக  திருவுளச்சீட்டிழுப்புமுறை கையாளப்படும்.

இரகசிய வாக்கெடுப்பின்போது உறுப்பினர்களுக்கு வாக்குச்சீட்டொன்று வழங்கப்பட்டிருக்கும். போட்டியிடும் வேட்பாளர்களின் ஒருவரின் பெயரை எழுதுவதற்கு ஒரு பகுதியும், உறுப்பினர் கையொப்பம் இடுவதற்கும் ஒரு பகுதி இருக்கும். இவை இரண்டும் நிரப்படவேண்டும்.

சபாநாயகராக தெரிவுசெய்யப்படுபவர், நாடாளுமன்ற செயலாளரின் நெறிப்படுத்தலின்படி உறுதியுரை எடுப்பார்.சபாநாயகர் தேர்வு நிலையியற்கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் நடந்தபின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் , சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வார்கள்.அதன்பின்னர் பிரதிசபாநாயகர், குழுக்களின் தவிசாளர் பதவிகளுக்கு தேர்வு இடம்பெறும்.

( ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தால் வாக்கெடுப்பு நடத்தப்படும்.) அதன்பின்னர் சபாநாயகரின் உரை இடம்பெறும். இந்நடவடிக்கைகள் மாத்திரமே கன்னிஅமர்வில் இடம்பெறும். அதன்பின்னர் பாராளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்படுகின்ற திகதிவரை சபை ஒத்திவைக்கப்படும்.

முதலாவது அமர்வில் ஜனாதிபதி கலந்துகொண்டாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாது.

சபை கூடும் திகதியும் நேரமும் எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?

மாதந்தோறும் முதலாவது, மூன்றாம் வாரங்களில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் நாடாளுமன்றம் கூடவேண்டும்.செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பகல் ஒரு மணிக்கும், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகல் 10.30 மணிக்கும் சபை அமர்வு ஆரம்பமாகும்.ஜனாதிபதியால் பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டால் கூடாது.

விசேட அமர்வுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் சபை அவசரமாகக் கூடும்.கூட்ட நடப்பெண்!சபாபீடத்துக்கு தலைமைதாங்கும் ( அக்கிராசனத்தில்) அமர்ந்திருக்கும் உறுப்பினர் உட்பட 17 பேர் சபைக்குள் கட்டாயம் இருக்கவேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால், உறுப்பினர்கள் அந்நிலைமையை சபாபீடத்தின் கவனத்துக்கு கொண்டுவரலாம். அதன்பின்னர் அழைப்பு மணி அடிக்கப்படும் ( கோரம்) 5 நிமிடங்களுக்குள் 20 உறுப்பினர்கள் அவைக்குள் வராவிட்டால், சபை ஒத்திவைக்கப்படும்.

(கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே இம்முறை பாராளுமன்ற அமர்வு நடைபெறும். அதுதொடர்பான வழிகாட்டல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ளது.)

தகவல் மூலம் – நாடாளுமன்ற நிலையியற்கட்டளைகள் சட்டம்

நாடாளுமன்றத்தால் இன்று நடத்தப்பட்ட இணையவழி கலந்துரையாடல்மூலம் தெரிவிக்கப்பட்ட கருத்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆர்.சனத்