இலங்கை அரசியல் வரலாற்றிலேயே தொடர்ச்சியாக  42 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனை படைத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு மாவட்டத்தில் 5 பொதுத்தேர்தல்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றும் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

அரசியலில் தந்திரம், மந்திரம், நெளிவு, சுழிவு, சூழ்ச்சி, சதி என அத்தனை அம்சங்களையும் கரைத்து குடித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, கால்நூற்றாண்டுக்கு மேலாக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியையும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

இதுவும்கூட ஒருவகையான சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இதற்கு முன்னர் ஐ.தே.கவுக்கு தலைமை தாங்கியவர்கள் இத்தனை ஆண்டுகள் பதவியில் நீடிக்கவில்லை.

1947  முதல் 2015 வரை நடைபெற்றுள்ள 15 பொதுத்தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி யானை சின்னத்திலேயே போட்டியிட்டது. இதில் 5 தேர்தல்களுக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை வழங்கியுள்ளார். இரண்டு தேர்தல்களில் மட்டுமே ஐ.தே.கவால் வெற்றிநடைபோடமுடிந்தது. (2001,2015).

இதற்கு முன்னரும் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டிருந்தன. முக்கிய உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். ஆனால், சஜித் தலைமையிலான அணியின் வெளியேற்றமே பெரும் தாக்கமாக கருதப்படுகின்றது.

குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சியால் பிரதான எதிர்க்கட்சி என்ற பதவியைக்கூட தக்கவைத்துக்கொள்ள முடியாமல்போகும் எனவும், கொழும்பு மாவட்டத்தில் விருப்புவாக்கு பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க கீழிறங்கக்கூடும் எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ரணில் சந்தித்த பொதுத்தேர்தல்கள்…….

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 1970 ஆம் ஆண்டுமுதல் செயற்பாட்டு அரசியலில் இறங்கினாலும் 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில்தான் முதல் தடவையாக போட்டியிட்டார்.

1977 ஜுலை 21 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலுள்ள பியகம தொகுதியில் – கன்னி தேர்தலை எதிர்கொண்ட ரணில் விக்கிரமசிங்க, 22 ஆயிரத்து 45 வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையைப்பெற்றது. ஜே.ஆர்.ஜயவர்தனவே தலைமைத்துவம் வழங்கினார்.

1978 இல் புதிய அரசியல் யாப்பு இயற்றப்பட்ட பின்னர், சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால்  பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இத்தேர்தலிலும் ரணில் விக்கிரமசிங்க கம்பஹா மாவட்டத்தில் களமிறங்கினார். 86 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே தேர்தலில் வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தையும் கைப்பற்றியது.

1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 லட்சத்து 91 ஆயிரத்து 194 வாக்குகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். எனினும், இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்விகண்டது. சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது. கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.

இத்தேர்தலின் பின்னர் 1994 இல் கட்சி தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.

2000 ஒக்டோபர் 10 ஆம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பிரதம வேட்பாளராக கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க 3 லட்சத்து 63 ஆயிரத்து 668 வாக்குகளைப்பெற்றார். இத்தேர்தலில் மக்கள் கூட்டணி வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிநடைபோட்டது. 10 ஆசனங்களைக் கைப்பற்றியது.

எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு,
2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.  இத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. 4 லட்சத்து 15 ஆயிரத்து 686 வாக்குகளைப்பெற்று கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க முதலிடம் பிடித்தார். ஐ.தே.க.வே கொழும்பு மாவட்டத்தில் வெற்றிநடைபோட்டது.

2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க, 3 லட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றிருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிக்கொடி நாட்டி, 9 ஆசனங்களைக் கைப்பற்றியது.

2010 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கிய ரணில் விக்கிரமசிங்க, 2 லட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப்பெற்று ஐ.தே.க. பட்டியலில் முதலிடம் பிடித்தாலும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். விமல்வீரவன்ஸவே முதலிடம் பிடித்தார். கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே 10 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தார். 5 லட்சத்து 566 விருப்பு வாக்குகளைப் பெற்றார். பொதுத்தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் இதுவாகும்.

இதற்கு முன்னர் 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா அம்மையார் கம்பஹா மாவட்டத்தில் 4 லட்சத்து 64 ஆயிரத்து 588 வாக்குகளைப் பெற்றிருந்தார்.கொழும்பு மாவட்டத்திலும் ஐ.தே.கவே கோலோச்சியது.

2020 பொதுத்தேர்தல் – கொழும்பு மாவட்டம்

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 924 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.19 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காகவே அரசியல் கட்சிகளில் இருந்தும், சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் இவர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளில் இருந்து 352 பேரும், 26 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 572 பேரும் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் 17 லட்சத்து 9 ஆயிரத்து 209 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ஸ, பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்தன, தூய ஹெலஉறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர்.

பலம்பொருந்திய வேட்பாளர்கள் பலர் கொழும்பில் களமிறங்கியிருப்பதால் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கோலோச்சிய ரணிலுக்கு, சஜித் அணியின் வெளியேற்றம் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது. ரணிலை விடவும் சஜித் அதிக விருப்பு வாக்குகளை பெறக்கூடும் எனவும், இதனால் கொழும்பு மாவட்டத்தில் முதன்முறையாக மூன்றாம் நிலைக்குகீழ் இறங்கவேண்டிய நிலை ரணிலுக்கு ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது.

ரணில் என்றாலே சிறந்த அரசியல் இராஜதந்திரி. பொருளாதாரம் தொடர்பில் அனுபவம் உள்ளவர். சர்வதேச நாடுகளுடன் சிறந்த தொடர்பை தக்கவைத்துக்கொண்டிருப்பவர். அரசியலில் மிஸ்டர் க்ளீன் என்றும் போற்றப்பட்டனர். ஆனால், மத்திய வங்கி விவகாரமானது மிஸ்டர் க்ளீன் என்ற அவரது நாமத்துக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.