மலையகத்தின் நுழைவாயிலாகக் கருதப்படுகின்ற சப்ரமுகவ மாகாணத்திலேயே இரத்தினபுரி மாவட்டம் அமைந்துள்ளது. சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் அம்மாவட்டத்தில், தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதியொருவரை வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யமுடியாத நிலைமை நீடிக்கின்றது.

தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான வாக்கு வங்கி தமிழ் மக்கள் வசம் இருக்கின்றபோதிலும், அதற்கான வாய்ப்பை உரியவகையில் பயன்படுத்தாமல் தொடர்ச்சியாக கோட்டைவிடப்படுவதுதான் வேதனைக்குரிய விடயமாகும்.

எனவே, இம்முறையாவது இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு – ஒருவிரல் புரட்சியில் ஈடுபட்டு – தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுத்து – வரலாற்று சாதனை படைக்கவேண்டும் என்பதே மலையக புத்திஜீவிகளின் அறைகூவலாக இருக்கின்றது.

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை – 2019

இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 77 ஆயிரத்து 582 ஆக இருக்கும் நிலையில் அதில் சுமார் 74 ஆயிரம் தமிழ் வாக்காளர்களும், சுமார் 22 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும் உள்ளடங்குகின்றனர்.

தமிழ் பேசும் வாக்காளர்களின் எண்ணிக்கை எடுத்துக்கொண்டால் சுமார் 96 ஆயிரமாக இருக்கின்றது. ஆக தமிழ், முஸ்லிம் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட்டால் சிறுபான்மையின பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக்கொள்ளலாம்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருந்தும் – குறைவான வாக்கு வித்தியாசத்தில் அவரால் தெரிவாக முடியாமல்போனது.

2015 பொதுத்தேர்தலில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 454 பேர் வாக்குரிமையைப் பயன்படுத்தவில்லை. 23 ஆயிரத்து 26 வாக்குகளும் நிராகரிக்கப்பட்டன. வாக்களிக்காதவர்களில் கணிசமானளவு தமிழர்களும் உள்ளடங்குகின்றனர்.

2015 பொதுத்தேர்தல் முடிவு – இரத்தினபுரி மாவட்டம்

மறுபுறத்தில் தமிழ் வாக்காளர்கள் தமது இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கும் வழங்கியிருந்தனர். ஆனால், சிங்கள மக்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு வழங்காத நிலைமை காணப்பட்டது. இப்படியான காரணங்களாலேயே தமிழ்ப் பிரதிநிதித்துவம் கைநழுவியது எனலாம்.

எனவே, கடந்தகால சம்பவங்களை படிப்பினையாகவும், பயிற்சியாகவும் கருதி இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்களுடன் இணைந்து – வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் யாரென கண்டறிந்து – கருத்தாடல்களை உருவாக்கி – சமூகஅக்கறையுடன் வாக்குரிமையை பயன்படுத்தினால் இம்முறை நடைபெறும் பொதுத்தேர்தல் இரத்தினபுரி மாவட்ட தமிழர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் இம்முறை 11 ஆசனங்களை இலக்குவைத்து 16 அரசியல் கட்சிகளில் இருந்து 224 பேரும், 8 சுயேட்சைக்குழுக்களிலிருந்து 84 பேருமாக மொத்தம் 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தமிழ் வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக்கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய பிரதான கட்சிகளில் தலா ஒரு தமிழ் வேட்பாளர் வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.

2015 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் யானை சின்னத்தில் களமிறங்கி 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப்பெற்ற எம். சந்திரகுமார் இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றார். அவருக்கு சில முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ன. இ.தொ.காவும் இம்முறை தமிழ் வேட்பாளரை நிறுத்தவில்லை. எனவே, இவருக்கான வெற்றிவாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

குறிப்பு – ( ஏனைய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெறமாட்டார்கள், அவர்களுக்கு வாக்களிக்ககூடாது என்ற கருத்தை வெளியிடுவதற்கு நான் முற்படவில்லை. தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தே விபரிக்க முயற்சிக்கின்றேன்.)

2019 ஜனாதிபதி தேர்தல் முடிவு – இரத்தினபுரி மாவட்டம்

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 8 தேர்தல் தொகுதிகளில் ஐந்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், மூன்றில் (பெல்மடுல்ல, பலாங்கொடை, இறக்குவானை)  ஐக்கிய தேசியக்கட்சியும் வெற்றிபெற்றது. எனினும், 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலில் 8 தொகுதிகளிலும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே முன்னிலை வகித்தது.

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 8 தேர்தல் தொகுதிகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு,

1.எஹலியகொட தேர்தல் தொகுதி – 102,356
2.இரத்தினபுரி தேர்தல் தொகுதி – 130,334
3.பெல்மடுல்ல தேர்தல் தொகுதி – 92,216
4.பலாங்கொடை தேர்தல் தொகுதி – 116,400
5.இறக்குவானை தேர்தல் தொகுதி – 111,499
6.நிவித்திகல தேர்தல் தொகுதி – 104,273
7.கலாவான தேர்தல் தொகுதி – 68,326
8.கொலன்ன தேர்தல் தொகுதி – 152,178

இரத்தினபுரிக்கு தேசியப்பட்டியல்……….

இலங்கையில் 1947 ஆம் ஆண்டே முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. முதலாவது பாராளுமன்றத்தில் 7 மலையக தமிழ்ப் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர்.

1978 இற்கு பின்னரே  மாவட்ட அடிப்படையிலான விருப்பு வாக்கு விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களெல்லாம் தொகுதி அடிப்படையிலேயே நடைபெற்றது.

1947 பொதுத்தேர்தலின் பின்னர் அமைந்த முதலாவது பாராளுமன்றத்திலேயே அதாவது 1948 இல் பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.அதன்பின்னர் தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் மலையகத் தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.

( 1950 களில்  இலங்கை குடியுரிமைகோரி விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு மாத்திரமே அனுமதி கிடைத்தது. அதன்பின்னர் 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. எனினும், வாக்குரிமையை முழுமையாக பெறுவதற்கு 1988வரை போராடவேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.)

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு இரண்டு தடவைகள் நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருந்தது. 1977 இல் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றார்.

1989 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிலேயே பிரதான கட்சிகளுடன் இணைந்து மலையக பிரதிநிதிகள் போட்டியிட்டனர்.

89 இல் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டது. இ.தொ.காவின் வேட்பாளர் முத்து சிவலிங்கம், வீ. அண்ணாமலை ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். எனினும், ஐ.தே.க. ஆட்சியில் இ.தொ.காவுக்கு இரண்டு தேசியப்பட்டியல்கள் வழங்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமானும், பிபி தேவராஜும் பாராளுமன்றம் சென்றனர். அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிபெற்றது. இரத்தினபுரியில் எவரும் தெரிவாகவில்லை.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்ட இ.தொ.காவுக்கு இரண்டு தேசியப்பட்டியல் நியமனங்கள் வழங்கப்பட்டன. அதில் ஒன்று இரத்தினபுரி மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது.

இ.தொ.காவின் உப தலைவராக செயற்பட்ட ஏ.எம்.டி. ராஜன் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பாராளுமன்றம் சென்றார். பாராளுமன்றம் கலைக்கப்படும்வரை உறுப்பினராக செயற்பட்டார். 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரத்தினபுரி மண்ணுக்கு இன்னும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இம்முறையாவது அது சாத்தியமாகுமா என்பதே பலரினதும் கேள்வி.

ஆர்.சனத்

தகவல்மூலம் – தேர்தல் ஆணைக்குழு இணையம்