2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள 9 தேர்தல் தொகுதிகளையும் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு, 2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மூன்று தொகுதிகளை மாத்திரமே தக்கவைத்துக்கொள்ளமுடிந்தது.

2015 பொதுத் தேர்தலில் 79 ஆயிரத்து 385 வாக்கு வித்தியாசத்தில் பதுளை மாவட்டத்தில் மண்கவ்விய மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டணி, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிநடைபோட்டது. குறிப்பாக 6 தொகுதிகளில் முன்னிலை வகித்து, மொத்தமாக 2 லட்சத்து 76 ஆயிரத்து 211 வாக்குகளைப் பெற்று , 24 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் பதுளை மாவட்டத்தைக் கைப்பற்றியது.

2015 பாராளுமன்றத் தேர்தல் – பசறை தேர்தல் தொகுதி

தமிழ் மக்கள் செறிந்துவாழும் பசறை, ஹாலிஎல, ஹப்புத்தலை ஆகிய தொகுதிகளிலேயே சஜித் முன்னிலை வகித்தார்.

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பதுளை மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் 288 பேர் பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் சுமார் 60 தமிழ் வேட்பாளர்கள் உள்ளடங்குகின்றனர்.

பிரதான அரசியல் கட்சிகளாகக் கருதப்படுகின்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஒரு தமிழ் வேட்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருவரும், ஐக்கிய தேசியக்கட்சியில் இருவரும், தேசிய மக்கள் சக்தியில் ஒருவரும் போட்டியிடுகின்றனர். சுயேட்சைக்குழுக்களிலேயே அதிகளவான தமிழ் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

2015 இல் பதுளை மாவட்டத்துக்கு 8 ஆசனங்களே ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சனத்தொகை அதிகரிப்புக்கேற்ப இம்முறை ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு பதுளை மாவட்டத்திலிருந்து 9 பேர் பாராளுமன்றம் செல்லவுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் மொட்டு அணியிலேயே வாக்கு கேட்கின்றது. ஐக்கிய தேசியக்கட்சியே இரு அணிகளாக பிளவுபட்டு தேர்தலை எதிர்கொள்கின்றன.

பதுளை மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 68 ஆயிரத்து 166 ஆகும். இவர்களில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 700 தமிழ் வாக்காளர்கள் உள்ளடங்குகின்றனர். 2015 பொதுத்தேர்தலில் 80.06 வீதமும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் 86.25 வீதமும் வாக்கு பதிவு இடம்பெற்றது.

2015 பொதுத்தேர்தலில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 637 பேர் வாக்குரிமையை பயன்படுத்தவில்லை. 24 ஆயிரத்து 167 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. 2019 ஜனாதிபதித் தேர்தலில் 90 ஆயிரத்து 443 பேர் வாக்களிக்கவில்லை. 6 ஆயிரத்து 978 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

2015 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது பதுளை மாவட்டத்தில் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் பதிவுசெய்யப்பட்ட, அளிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, செல்லுபடியான வாக்கு விபரமும், 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,

1.மஹியங்கனை தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 95,715

அளிக்கப்பட்ட வாக்குகள் – 72,202
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,707
செல்லுபடியான வாக்குகள் – 69,495
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 105,150

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.2015 பொதுத்தேர்தலின்போது மஹிந்தவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தலைமை வழங்கினார். அக்கூட்டணியில் உள்ள 90 வீதமானோரே இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கின்றனர்.)

2.வியலுவ தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 51,295
அளிக்கப்பட்ட வாக்குகள் – 37,712
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,309
செல்லுபடியான வாக்குகள் – 35,403
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 54,995

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

3.பசறை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 62,901
அளிக்கப்பட்ட வாக்குகள் – 46,197
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,015
செல்லுபடியான வாக்குகள் – 43,182
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 67,196

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.)

4.பதுளை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 55,185
அளிக்கப்பட்ட வாக்குகள் – 42,044
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,522
செல்லுபடியான வாக்குகள் – 40,522
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 59,353

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

5.ஹாலிஎல தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 69,909
அளிக்கப்பட்ட வாக்குகள் – 52,785
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,204
செல்லுபடியான வாக்குகள் – 49,581
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 74,785

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.)

6.ஊவா – பரணகம தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 62,689
அளிக்கப்பட்ட வாக்குகள் – 47,357
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,234
செல்லுபடியான வாக்குகள் – 45,123
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 66,278

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

7.வெலிமடை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 74,436
அளிக்கப்பட்ட வாக்குகள் – 56,076
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,384
செல்லுபடியான வாக்குகள் – 53,692
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 80,482

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

8.பண்டாரவளை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 83,147
அளிக்கப்பட்ட வாக்குகள் – 63,231
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,924
செல்லுபடியான வாக்குகள் – 60,307
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 89,861

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் வெற்றிபெற்றன.)

9.ஹப்புத்தலை தேர்தல் தொகுதி

பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 65,209
அளிக்கப்பட்ட வாக்குகள் – 48,325
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,325
செல்லுபடியான வாக்குகள் –45,000
2019 இடாப்பின் பிரகாரம் வாக்காளர்களின் எண்ணிக்கை – 70,066

(இத்தொகுதியில் 2015 பொதுத்தேர்தல், 2019 ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.)

பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் வாக்காளர்களும் இருக்கின்றனர். எனவே, கட்சிகள் புரிந்துணர்வின் அடிப்படையிலும், வாக்காளர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் கருத்திற்கொண்டு வாக்குரிமையை பயன்படுத்தினால் பதுளை மாவட்டத்தில் இருந்து மூன்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகலாம்.

வழமையாக 25 ஆயிரத்துக்கும் 30 ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தமிழ் வாக்காளர்கள் வாக்களிப்பதில்லை. வெளிநாட்டுகளில் இருப்பவர்களைத்தவிர, வெளி மாவட்டங்களில் தொழில் நிமித்தம் உள்ளவர்கள், இம்முறையாவது தமது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வரவேண்டும்.

பதுளை மாவட்டத்தில்தான் தற்போது காணிகள் அதிகளவு சுவீகரிக்கப்படுகின்றன. வெளிமாவட்டங்களில் இருந்துவந்து பலர் குடியேறுகின்றனர். எனவே, இருப்பு குறித்தும் வாக்காளர்கள் சிந்திக்கவேண்டும்.

ஆர்.சனத்