இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் புதிய தலைவராக நவீன் திஸாநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்துள்ளது.அத்துடன் பொதுச்செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், புதிய நியமனங்கள் தொழிற்சங்க யாப்புக்கு முரணாகவே இடம்பெற்றுள்ளன என்றும், இதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் யாப்பின் பிரகாரம் தலைமைப்பதவியை வகிப்பவர், பதவி துறந்தால் மட்டுமே புதியவரை நியமிக்க முடியும் எனவும்,

சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டியே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் ஏற்பாடுகள் உள்ள நிலையில், அதற்கு முரணாக இடம்பெற்றுள்ள நியமனங்களை ஏற்கமுடியாது என மேற்படி சங்கத்தின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளை வகித்தவர்கள் அறிவித்துள்ளனர்.

அதேவேளை, சங்கம் தொடர்பில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் பொதுச்சபைக்கே இருக்கின்றது எனவும், 5 வருடங்களுக்கு ஒரு தடவையே அக்கூட்டம் நடைபெறும் எனவும் சுட்டிக்காட்டும் தொழிற்சங்க பிரமுகர்கள், இவ்வாறான கட்டமைப்புகள் இருக்கையில் எதற்காக தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமானது 1957 ஆம் ஆண்டு கம்பளையிலேயே உதயமானது. பெருந்தோட்டங்களில் தொழில்புரிந்த சிங்கள தொழிலாளர்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது. எனினும், அச்சங்கத்தின் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி, விசேட ஒப்பந்தத்தின் ஊடாக அது ஐக்கிய தேசியக் கட்சியின்கீழ் இயங்கும் தொழிற்சங்கமாக மாற்றப்பட்டது.

(எனினும் சுயாதீனமாக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் இருக்கின்றது.)

சங்கத்தின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன நியமிக்கப்பட்டார். சிறிதுகாலம் தீவிரமாக செயற்பட்ட பின்னர் – காலப்போக்கில் சங்கத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. எனினும் 1971 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் காமினி திஸாநாயக்க (நவீன் திஸாநாயக்கவின் தந்தை) துணை தலைவராக நியமிக்கப்பட்டார்.

சங்கத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் காமினி திஸாநாயக்க இறங்கினார்.    கே. வேலாயுதம், புத்திரசிகாமணி உட்பட மேலும் சிலருடன் இணைந்து பலம்பொருந்திய தொழிற்சங்கமாக மாற்றியமைத்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அடுத்த படியாக அதிகளவான தொழிலாளர்கள் இச்சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

ஆரம்ப காலத்தில் பெருந்தோட்டங்களில் தொழில்புரியும் ஆண், பெண் தொழிலாளர்களுக்கு வெவ்வேறு தொகையிலேயே சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. 1980 காலப்பகுதியில் இந்நிலைமையை இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமே மாற்றியமைத்தது. இப்படி அத்தொழிற்சங்கத்தின் பல சேவைகளைக் குறிப்பிடலாம்.

தலைவர் இருந்தாலும் பொதுச்செயலாளருக்கே கூடுதல் அதிகாரங்கள் இருக்கின்றன. அந்தவகையில் சங்கத்தின் பொதுச்செயலாளராக அமரர் கே. வேலாயுதம் பதவியேற்ற பின்னர் சர்வதேச உறவுகளை பலப்படுத்தியதுடன், தோட்ட மக்களும் பதவிகளை வகிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

குறித்த சங்கத்துக்கு அசையா சொத்துகளும், வங்கியில் நிலையான வைப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கத்தின் தலைவராக பதவி வகித்த ரவி சமரநாயக்க நல்லாட்சியின்போது தொழில் அமைச்சராக நியமிக்கப்பட்டதையடுத்து அவரின் இணக்கத்துடன் ஹரின் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டார்.
 
வேலாயுதம் ஐயாவின் மறைவின் பின்னர் பொதுச்செயலாளர் பதவி வடிவேல் சுரேஷ் வசமானது.
 
தலைவரும், செயலாளரும் பொதுத்தேர்தலில் சஜித் அணியுடன் இணைந்து போட்டியிடுகின்றனர். இந்நிலையிலேயே இவர்கள் இருவரையும் அகற்றும் நோக்கில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அது தொடர்பான இறுதி தீர்ப்பும் இன்னும் வெளியாகவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே புதிய நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மத்திய குழுவில் 85 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். முக்கிய தீர்மானங்கள் எடுப்பதாயின் அவர்கள் அனைவரும் கூடி, மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தீர்மானம் செல்லுபடியாகாது.

அதேபோல் தலைவர், செயலாளர் உட்பட 19 பேர் அடங்கிய செயற்பாட்டக்குழுவொன்றும் இருக்கின்றது. செயற்குழு கூட்டத்தை தலைவர், பிரதி தலைவர், செயலாளர் ஆகியோரே கூட்ட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கெல்லாம் மேலாக பொதுச்சபை இருக்கின்றது. அதற்குதான் ‘வீட்டோ’ அதிகாரம் இருக்கின்றது. 5 வருடங்களுக்கு ஒருதடவையே பொதுச்சபைக்கூடும். கூட்டம் குறித்து அங்கத்தவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அறிவிப்பு விடுக்கவேண்டும்.

நிதி அறிக்கைகள், சங்கத்தின் கொள்கை, புதிய நிர்வாகக்குழு, செயற்குழு, நிறைவேற்றுக்குழு தேர்வு உட்பட முக்கிய விடயங்கள் இதன்போதே நடைபெறும்.

 

அதேவேளை, கட்சி யாப்பைமீறும் வகையில் மாற்றுக்கட்சியில் இணைந்ததாலேயே ஹரின் மற்றும் வடிவேல் சுரேஷ் ஆகியோர் நீக்கப்பட்டனர் என ஐ.தே.க. தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஆர்.சனத்