கொரோனா வைரஸ் பரவலையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளன. அதன்பின்னர் நான்கு கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” ஜூன் மாதம் 29 ஆம் திகதியுடன் பாடசாலை விடுமுறை நிறைவடைகின்றது. அதன்பின்னர் நான்கு கட்டங்களின்கீழ் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்.

முதற்கட்டமாக ஜுன் 29 ஆம் திகதி அதிபர், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தின் சமூகமளிக்க வேண்டும். அன்றைய தினம் மாணவர்கள் வரவேண்டியதில்லை.

இரண்டாம் கட்டாக ஜுலை 6 ஆம் திகதி 5,11 மற்றும் 13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை ஆரம்பமாகும்.

ஜுலை 20 ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகும். 10, 12 ஆம் ஆண்டுகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அன்று பாடசாலைக்கு வருகைதரமுடியும்.

ஜுலை 27 ஆம் திகதி நான்காம் கட்டமாக 3,4,6,7,8 மற்றும் 9 ஆம் ஆண்டு மாணவர்களை பாடசாலைக்கு அழைத்தவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேவேளை, உயர்தரப்பரீட்சை செப்டம்பர் 7 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை நடைபெறும். 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 13 ஆம் திகதி இடம்பெறும்.

3, 4 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் முற்பகல் 11.30 மணிவரையும், 5 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணிவரையும்,

6,7,8,9 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1,30 மணிவரையும், 10,11,12,13 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணிவரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் ” – என்றும் அவர் கூறினார்.