பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் இருந்தும், சுயேட்சைக்குழுக்களில் இருந்தும் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அரசியல் கட்சிகளின் சார்பில் 3 ஆயிரத்து 652 பேரும், 617 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 3 ஆயிரத்து 800 பேரும் இம்முறை களமிறங்கியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். இதன்படி 19 ஆசனங்களை இலக்குவைத்து அங்கீகரிக்கப்பட்ட 16 அரசியல் கட்சிகளில் இருந்து 352 பேரும், 26 சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 572 பேரும் தேர்தலில் இறங்கியுள்ளனர்.

பொலன்னறுவை மாவட்டத்திலேயே குறைந்தளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகளிலிருந்து 88 பேரும், சுயேட்சைக்குழுக்களில் இருந்து 64 பேருமாக மொத்தம் 152 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலேயே கூடுதல் வாக்காளர்கள் இருக்கின்றனர். 17 லட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

அரசியல் கட்சிகளின் சார்பில் 358 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 45 நிராகரிக்கப்பட்டு 313 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

சுயேட்சைக்குழுக்களின் சார்பில் 697 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 80 நிராகரிக்கப்பட்டு 617 ஏற்றுக்கொள்ளப்பட்டன.

பாராளுமன்றத்துக்கு 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவுசெய்யப்படுகின்றனர். 113 ஆசனங்களைப் பெறும் கட்சி அல்லது சுயேட்சைக்குழுவுக்கு ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை கிட்டும்.