1947 முதல் 2015 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 15 பாராளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சி 08 தேர்தல்களிலும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி 07 தேர்தல்களிலும் வெற்றிபெற்று அரியணையேறியுள்ளன.

பிரதான இரு அரசியல் கட்சிகளுள் ஒன்றாக விளங்கிய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது 68 ஆண்டுகளுக்கு பின்னர் -தலைமை வழங்கும் அந்தஸ்த்தை இழந்து, புதிதாக உதயமான கட்சியுடன் கூட்டணி அமைத்து பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றது.

நுவரெலியா, களுத்துறை உட்பட சில மாவட்டங்களில் தனது சொந்த சின்னத்திலும் (கை) அக்கட்சி போட்டியிடுகின்றது.

அதேபோல் ஐக்கிய தேசியக்கட்சியும் இரு அணிகளாக பிளவுபட்டே தேர்தலை எதிர்கொள்கின்றது.ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணி யானை சின்னத்திலும், சஜித் பிரேமதாச தலைமையிலான தரப்பு தொலைபேசி சின்னத்திலும் களம் காண்கின்றன.

ஐ.தே.க. உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர். அக்கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பங்காளிகளும் ரணிலைக்கவைிட்டு சஜித்துடன் சங்கமித்தே பொதுத்தேர்தலை எதிர்கொள்கின்றன.

அதேவேளை, உள்ளாட்சி மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் முதல் தடவையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இரண்டிலும் அமோக வெற்றியை பெற்றுள்ள நிலையில், பொதுத்தேர்தலிலும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இலக்கை குறிவைத்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டணி அமைத்து தேசிய மக்கள் சக்தியாக தேர்தலை எதிர்கொள்கின்றது.

முதலாவது பொதுத்தேர்தல்…..

குறிப்பாக 1947 முதல் 1977 வரை தொகுதி அடிப்படையிலேயே பொதுத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 1978 இற்கு பிறகே விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்மை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அமரர். டிஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிபெற்றது.

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் -1947

1952 இல் நடைபெற்ற இரண்டாவது பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சியே வெற்றிநடைபோட்டது.

இலங்கையின் 2ஆவது பொதுத்தேர்தல்- 1952

1956 இல் நடைபெற்ற 3ஆவது பொதுத் தேர்தலில் அமரர். எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது. புதிய கட்சியை ஆரம்பித்து நான்கரை வருடங்களிலேயே அவர் ஆட்சியைப் பிடித்தார்.

15 பொதுத்தேர்தல்களில் 8 இல் ஐ.தே.க. வெற்றி!

1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் நான்காவது பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியே அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது.

1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்படும்.

1960இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் 95 பேர் வாக்களிப்பு ஊடாகவும், அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். சபையில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

எனினும் 1959 இல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இலங்கையை 145 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்தது.

இதில் 140 தொகுதிகள் தனி அங்கத்துவ தொகுதிகளாகவும், நான்கு தொகுதிகள் இரட்டை அங்கத்துவ தொகுதிகளாகவும், மத்திய கொழும்பு மூன்று அங்கத்துவ தொகுதியாகவும் வரையறுக்கப்பட்டது.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆகநீடித்தது.

இதன்படி மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரித்தது. (140+8+3 +6)

இலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தல் – 1960

இலங்கையில் 5ஆவது பொதுத்தேர்தல் 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றிபெற்றது.

ஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார்.

உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் – 1960

1970 இல் நடைபெற்ற இலங்கையின் 6ஆவது பாராளுமன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பெற்றிபெற்றது.

1977 இல் நடைபெற்ற 7ஆவது பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் அரியணையேறியது. இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவே வரலாற்று வெற்றியாக கருதப்படுகின்றது.

சர்வஜன வாக்கெடுப்புமூலம் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலுமொரு தவணைக்கு நீடிக்கப்பட்டதால் 8ஆவது பொதுத்தேர்தல் 1989 இல்தான் நடைபெற்றது. இதில் ரணசிங்க பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.

அதன்பின்னர் 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்று, ஐக்கிய தேசியக்கட்சியின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைத்தது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே வெற்றிபெற்றது.எனினும், 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றி பெற்றது. 2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.

2004 ஏப்ரல் 02 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றது.

2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றிநடைபோட்டு 2 ஆவது முறையும் அரியணையேறிய மஹிந்த ராஜபக்ச, அதே ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தவும் நடவடிக்கை எடுத்தார்.

அத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணிக்கே அமோக வெற்றி கிடைத்தது. 144 ஆசனங்களுடன் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சி மலர்ந்தது.

இலங்கையின் 7ஆவது ஜனாதிபதி தேர்தல் -2015

2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றிபெற்றது.இத்தேர்தலில் 106 ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக்கட்சி, சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தேசிய அரசமைத்தது.

ஐக்கிய தேசியக்கட்சி 93+13 = 106
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 83 +12=95
இலங்கை தமிழரசுக்கட்சி – 14+2=16
மக்கள் விடுதலை முன்னணி 4+2=6
ஈ.பி.டி.பி.-01
முஸ்லிம் காங்கிரஸ் -01

பொதுத்தேர்தலின் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் 2015 செப்டம்பர் முதலாம் திகதி கூடியது.

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பார்வை!