” இதெல்லாம் ஒரு படம்,செவ்வாய் கிரகத்துக்கே சென்று வித்தியாசமாகவும்,விசித்திரமாகவும் காட்சிகள் தயாரிக்கப்படும் இக்காலகட்டத்தில் ‘ஊதாங்கட்டை’ யையும், தோடையும் வைத்து படம் காட்டியிருக்கிறார்கள். இதில் பாராட்டு வேறு. அதுவும் வெளிநாட்டில் இருந்தகூட கைதட்டல்கள். இப்போதுதான் புரிகிறது இலங்கையில் தமிழ் சினிமாத்துறை ஏன் இன்னும் கீழ்மட்டத்தில் இருக்கிறது என்று” – இப்படியெல்லாம் விமர்சனக் கணைகளைத்தொடுத்து – படக்குழுவினரின் மனதை துளைத்து ‘எனக்கும் சினிமா’ தெரியும் என காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

‘தோடு’ என்ற குறும்படம்மூலம் இலங்கையில் வஞ்சிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் அவல நிலையையும், தொடர்ந்தும் அடிமைகளாக வழிநடத்தப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வலி சுமந்த வாழ்க்கையையும் புடம்போட்டி காட்டியுள்ளார் இயக்குநர் யுவன்.

படுத்துறங்கும்போதுகூட பட்டுச்சேலை,ஆபரணங்கள் என பார்ப்பவர்களின் விழிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் காட்சிகள் இருப்பது மட்டும் சினிமா அல்ல. எனவே, யதார்த்த வாழ்க்கையுடன் கதையோட்டத்தை நகர்த்தியுள்ள படக்குழுவினரை பாராட்டியே ஆகவேண்டும். (இருக்கும் வளங்களைக்கொண்டு சிறப்பாக செய்துள்ளனர். )

தோட்டப்பகுதிகளில் உள்ள வீடுகளில் சம்பளத்துக்கு முதல் நாள் அல்லது சம்பளம் போட்ட பின்னர், ‘பில்’ எழுதப்படும். அப்போது பத்தி, சூடம், உப்பு, மஞ்சள் என அந்த பட்டியல் நீளும். அந்த காலத்தையும் எம் மனத்திரைக்கு முன்னால் கொண்டுவந்து – மண்வாசனையோடு காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிள்ளைகளுக்காக பெற்றோர் செய்யும் தியாகம், பட்ஜட்டில் துண்டுவிழுந்தால் அதனை நிரப்புவதற்கு ‘தங்க நகைகள்’தான் அடகு வைக்கப்படும். அதில் பிரதானமானது தோடு. ( செருப்பு வாங்காமல், முடிவெட்டாமல் தியாகக் காட்சிகள்)
இறுதியில் தோடு சுத்தியிருந்த பேப்பரை வைத்தே – தொழிற்சங்க முதலைகளுக்கு சவுக்கடி கொடுத்தும் – சமூகம் இனியாவது சிந்திக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டு படம்முடிகிறது. சீதிஸ், சானு, உதவி இயக்குநர் கமேஷ் உட்பட அனைவருக்கும் நன்றிகள்……

https://youtu.be/Xe2NGlN5Akg