கோப்பியுகம் – குடியேற்றம்

1815 ஆண்டில் கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் – மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது.

1824 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் இலங்கையில் கம்பளை, சிங்ஹாபிட்டியவில் கோப்பி பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.  காலப்போக்கில் ஒருவகையான நோய்த்தாக்கத்தால் கோப்பி பயிர்செய்கை முற்றாக அழிவடைந்தது.

இதையடுத்தே ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் 1867 ஆம் ஆண்டில் லூல் கந்தரா. எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது.

1827 ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவிலிருந்து முதலாவது தொழிலாளி இலங்கையை வந்தடைந்தார் எனக் கூறப்பட்டாலும், தேயிலைப் பயிர்செய்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே கொத்துக் கொத்தாக வந்து குவிந்தனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

கரையோரப்பகுதிகளிலிருந்து கால்நடையாக மலையகப்பகுதிகளுக்கு சென்ற மக்கள் பல இடங்களிலும் குடியமர்த்தப்பட்டனர்.

குடியுரிமை – வாக்குரிமை பறிப்பு

இலங்கையில் ஆரம்பத்தில் முடியாட்சியே (மன்னராட்சி) நிலவியது. காலனித்துவ ஆட்சிகாலத்தில்தான் நிர்வாக மற்றும் அரசாங்க கட்டமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்தவகையில் 1931 ஆம் ஆண்டு டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரை மூலம் இலங்கையர்களுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டது.இலங்கையின் முதலாவது அரசுப்பேரவைக்கான பொதுத்தேர்தல் 1931 ஜுன் 13 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதிவரை நடைபெற்றது.

2ஆவது அரசுப் பேரவைக்கான தேர்தல் 1936 பெப்ரவரி 22 திகதி முதல் மார்ச் 07 ஆம் திகதிவரை 11 நாட்கள் நடைபெற்றது. இக்காலப்பகுதியில் மலையக மக்களை நடேசய்யர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இலங்கையில் 1947 இல் நடைபெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் தனித்து களமிறங்கிய இலங்கை, இந்திய காங்கிரஸ் சிறந்த வெற்றியை பதிவுசெய்தது.

இலங்கை இந்திய காங்கிரஸின் சார்பில் நாவலப்பிட்டிய தொகுதியில் போட்டியிட்ட மலையக காந்தி கே. இராஜலிங்கம் – 7 ஆயிரத்து 933 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றம் தெரிவானார். இதுவே கண்டி மாவட்டத்தில் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமாகும்.

அத்துடன், அளுத்நுவர தொகுதியில் போட்டியிட்ட டி. ராமானுஜம் என்பவரும் 2 ஆயிரத்து 772 வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவானார். அப்படியானால் ஆரம்பத்தில் கண்டி மாவட்டத்தில் இரண்டு தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருந்துள்ளது.

பொதுத்தேர்தலின் பின்னர் டட்லி சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி மலர்ந்தது.

1948 இல் பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.அதன்பின்னர் தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் சுமார் 30 வருடங்கள் இந்திய வம்சாவளி மக்கள் அநாதைகளாக்கப்பட்டனர்.

88 காலப்பகுதியில் மலையகத் தமிழர்களுக்கு மீண்டும் குடியுரிமை, வாக்குரிமை வழங்கப்பட்டது.

கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம்

1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தின்கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட எஸ்.ராஜரட்னம் 38 ஆயிரத்து 343 வாக்குகளைப் பெற்று சபைக்கு தெரிவானார்.

ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 204 வாக்குகளைப் பெற்று கண்டி மாவட்ட விருப்பு வாக்குபட்டியலில் முதலிடம் பிடித்தார் காமினி திஸாநாயக்க. 2000 ஆகஸ்ட் 18 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்ட கண்டித் தமிழர்கள்

அதன்பின்னர்  2000, 2001, 2004, 2010 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தெரிவுசெய்யப்படவில்லை.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் களமிறங்கிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக தென்பட்டிருந்தாலும், வன்முறை அரசியலால் திட்டமிட்ட அடிப்படையில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

இவ்வாறு 15 ஆண்டுகளாக தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் கண்டித் தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்தனர்.

அபிவிருத்தியாக இருந்தால் என்ன, உரிமை அரசியலாக இருந்தால் என்ன – அனைத்திலுமே வெளிப்படையாக அல்லாவிட்டாலும் மறைமுகமாகவேனும் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டனர்.சட்டரீதியாக கிடைக்க வேண்டியவைகூட திட்டமிட்ட அடிப்படையில் மறுக்கப்பட்டன.

தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கைநழுவியதாலேயே இத்தனை அவலங்களும் ஓரணியில் திரண்டு,தமிழர்களை அடக்கி ஆண்டன என்பது கசப்பான உண்மையாகும்.

85 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் கண்டி மாவட்டத்தில் வாழ்ந்தும் எப்படி அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர் ? அலசி ஆராய்ந்து பார்க்கையில் தவறு முழுமையாக மக்கள் பக்கம் அல்ல, விலைபோகும் அரசியல் தலைமைத்துவம் என்பது கண்டறியப்பட்டது. ( தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.)

மீண்டும் கிடைத்த வெற்றி

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கண்டி மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதற்காக  ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக வேலுகுமார் அரசியல் களம் புகுந்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அவர் வெற்றிபெற்று சபைக்கு தெரிவானார். முஸ்லிம் சகோதரர்களும் மூன்றாவது விருப்பு வாக்கை அவருக்கு பயன்படுத்தினர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். 62 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

15 ஆண்டுகளுக்கு பின்னர்  இவ்வாறு கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் கிடைத்தாலேயே கல்வி, அபிவிருத்தி என பல்துறைகளிலும் தமிழர்கள் வாழும் பகுதிகள் அபிவிருத்தி கண்டன. பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு காணி உரிமையும், வீடுகளும் கிடைக்கப்பெற்றன.

ஒரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவுசெய்வதற்கான வாக்குகள் இருந்தும், தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிப்பில் ஆர்வமின்மை, பிற வேட்பாளர்களுக்கு வாக்களித்தல், வாக்குகள் சிதறடிப்பு உட்பட மேலும் பல காரணங்களாலேயே 2000 முதல் பிரதிநிதித்துவம் கைநழுவியது. ஆனால், 2015 இல் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு வாக்களித்தமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் நாவலப்பிட்டிய தொகுதி மக்கள் பேராதரவை வழங்கியிருந்தனர்.

எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில்,  விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. கண்டி மாவட்டத்தில் பல தமிழர்கள் களமிறங்கியுள்ளனர். இதன்மூலம் வாக்குகள் சிதறடிக்கப்படும் அபாயம் இருக்கின்றது. கரணம் தப்பினால் மரணம் என்பது போல, சில வாக்குகள் சிதறடிக்கப்பட்டால்கூட மீண்டும் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகலாம்.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டதால் தமிழ் மக்கள் மீண்டும் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்படும் அபாயம் இருக்கின்றது. சில பேரினவாதிகளின் அரசியல் இலக்கும் அதுவாகவே இருக்கின்றது.

கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பது மலையகத் தமிழர்களின் அடையாளம் ஆகும். எனவே, அதனை தக்கவைத்துக்கொள்வதற்கு கண்டித் தமிழர்கள் ஓரணியில் திரளவேண்டும். மதிநுட்பத்துடன் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும். திட்டமிட்ட அடிப்படையில் வாக்குகளை சிறதடிப்பதற்காக களமிறங்கப்பட்டுள்ளவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் தற்கொலைக்கு ஒப்பானச்செயலாகும்.

இருப்பதை இல்லாமல் ஆக்குவதற்கு துடிக்கும் சில தமிழ்த் தலைமைகள் ஒன்றை இரண்டாக்கும் வழிமுறைகள் பற்றி சிந்தித்தால் சிறப்பாக இருக்கும்.

(பார்வை தொடரும்….)

( கண்டி மாவட்டத்திலுள்ள 13 தொகுதிகளிலுள்ள தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை உட்பட மேலும் சில விடயங்கள் அடுத்த பதிவில்…)

ஆர்.சனத்