இந்தியா முழுவதும் மே 3ஆம் திகதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இன்று வரை நடைமுறையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து பிற கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன.

இந்தியாவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி தீவிரமுடன் பரவி வரும் கொரோனாவை தடுக்க மத்திய அரசு தீவிரமுடன் செயலாற்றி வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணியளவில் உரையாற்றுகிறார் என தகவல் வெளியானது. இந்த உரையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றிய அறிவிப்பினை பிரதமர் மோடி வெளியிடுவார் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

பிரதமர் மோடி முக கவசம் அணிந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறும்பொழுது, ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தும்பொழுது, இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நாட்டில் நோய் தொற்று மிக வேகமுடன் பரவி வருகிறது.

பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து உள்ளோம். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவாலேயே இது சாத்தியப்பட்டது என கூறினார். இந்த உரையில், நாடு முழுவதும் மே 3 ஆம் திகதிஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.