இலங்கையில் கடந்த மார்ச் 11 முதல் இன்று (12.04.2020) முற்பகல் 10 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட 14 மாவட்டங்களில் 199 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

137 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 154 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருந்துவருகின்றனர்.

199 என்ற எண்ணிக்கைக்குள் சீனப் பெண்ணொருவரும் உள்ளடங்குகிறார். அவர் சிகிச்சைகளின் பின்னர் நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.எனவே, வைரஸ் தொற்றுக்கு இலக்கான இலங்கையர்களின் எண்ணிக்கை 197 ஆகும்.

அதேவேளை, நுவரெலியா, மாத்தளை, அம்பாந்தோட்டை, மொனறாகலை, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய 11 மாவட்டங்களில் இன்னும் எவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.

மேல்மாகாணம்….

மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 96 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 45 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 28 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 23 பேரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 34 பேரும், யாழ்ப்பாணத்தில் 7 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுளனர். குறிப்பாக ஏப்ரல் 4 ஆம் திகதிக்கு பின்னர் இன்று முற்பகல்வரை யாழ். மாவட்டத்தில் புதிதாக நோயாளி எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், கண்டி மாவட்டத்தில் 7 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும் , குருணாகலையில் இருவரும் , மாத்தறையில் இருவரும், அம்பாறையில் இருவரும் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை  ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர்.