உலகளாவிய ரீதியில் இனம், மதம், மொழி, நாடு, வயது, தகுதி, பதவி என எதையும் பாராது அனைவரையும் மரண பயத்துக்குள்ளாக்கி ஆட்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தற்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் தொற்றியுள்ளது.

இதனை அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன் அவரும் காணொளி ஊடாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சாள்ஸுக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.

பிரிட்டன் தலைமை மருத்துவ அலுவலர் பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனைக்கு ஏற்ப பிரதமருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கடந்த 24 மணிநேரத்தில் எனக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டன. எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. என்னை நானே தனிமைப்படுத்திக்கொள்வேன். நாம் இந்த வைரஸுக்கு எதிராகப் போராட, காணொளி காட்சி சந்திப்புகள் மூலம் அரசு நடவடிக்கைகளுக்கு தலைமை ஏற்பேன்” என்று அவர் ருவிட்டரில் காணொளியூடாகத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் இளவரசர் சாள்ஸும் கடந்த சில தினங்களாக தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்தபடியே தனது அலுவலகப் பணியை மேற்கொண்டு வருகின்றார்.

பிரிட்டன் இளவரசருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில், அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பது பிரிட்டன் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது