” அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவிருந்த பட்டதாரிகளுக்கான பயிற்சி நிறுத்தப்பட்டாலும் அதற்கான கொடுப்பனவு வழங்கப்படும்.” – என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மலையக பல்கலைக்கழகம் அமையவுள்ள இடத்தை தெரிவுசெய்வதற்காக அமைச்சர் நேற்று ஹட்டனுக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி தகவலையும் வெளியிட்டார்.

” பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். இதன்படி அதற்கான நியமனக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. எனினும், நியமனம் பெற்றவர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை தேர்தல் ஆணைக்குழு நிறுத்தியுள்ளது.

இவ்வாறு பயிற்சி இடைநிறுத்தப்பட்டாலும், அதற்கான கொடுப்பனவு வழங்கப்படும். நியமனம் பெற்றவர்களின் பெயர் பட்டியல் மே 11 ஆம் திகதி வெளியிடப்படும். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்தில் அதனை பார்வையிடமுடியும்.

அத்துடன், எட்டாம் தரம்வரை கல்விகற்ற, ஏழ்மையான குடும்பத்தில் உள்ள ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமும் ஆரம்பமாகியுள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடப்படும்.

10 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் உறுதியளித்தது.

ஆனால், 50 ஆயிரம் பேருக்குகூட வழங்கப்படவில்லை. எமது அரசு மூன்று மாதத்துக்குள்ளேயே ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேருக்கு அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.” – என்றும் அமைச்சர் கூறினார்.