ஆளுங்கட்சியிலுள்ள பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் ரவி கருணாநாயக்க மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருக்கலாம் – என்று ஜே.வி.பி. உறுப்பினர் பிமல் ரத்னாயக்க குற்றஞ்சாட்டினார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கான நடவடிக்கையானது தேர்தல் நாடகமாகும். பிணை முறி விவகாரத்தில் பொறுப்புகூறவேண்டிய பிரதான நபர் ரணில் விக்கிரமசிங்கவென கோப்குழுவின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விடயத்தில் பொறுப்புகூறவேண்டிய பிரதான சூத்திரதாரி ரணில் விக்கிரமசிங்கவே என தற்போதைய ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கோப்குழு முன்னிலையில் அன்று ஆணித்தரமாக கருத்துகளை முன்வைத்தனர்.

ஆனால், ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக குறைந்தபட்சம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்காவது சட்டமா அதிபர் தரப்போ, சி.ஐ.டியினரோ, பொலிஸாரோ இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேபோல் ரவி கருணாநாயக்கவை கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் கைது செய்யப்படவில்லை.

தற்போதைய ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் அன்று ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களின் வீடுகளிலேயே ஒளிந்திருந்தனர். பிரதான செயலாளர்களும் அதே நடைமுறையைதான் பின்பற்றினர்.

எனவே, ரவி கருணாநாயக்கவும் அவ்வாறு பலம்பொருந்திய நபரொருவரின் வீட்டில் மிகவும் பாதுகாப்பான முறையில் மறைந்திருப்பார் என நம்புகின்றோம்.” – என்றார்.