ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ளதால் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் இலகுவில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறமுடியும் – என்று சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“பொதுத்தேர்தல் நெருங்கும்வேளையில் ஐக்கிய தேசியக்கட்சிக்குள் மோதல் உக்கிரமடைந்துள்ளன. இதனால் அக்கட்சியின் உறுப்பினர்கள் இரு அணிகளாக தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

மறுபுறத்தில் மத்திய நிலைப்பாட்டைக்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்களும் அக்கட்சியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளனர்.எனவே, இம்முறை மாற்றுத்தேர்வாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கே வாக்களிப்பார்கள்.

இதன்மூலம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு உட்பட முக்கிய பணிகளை செய்வதற்கான மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆணையை மக்கள் எமக்கு வழங்குவார்கள்.

அதேவேளை, நான் தேசியப்பட்டியலில் வரமாட்டேன். தேர்தலில் போட்டியிட்டு மக்கள் ஆதரவுடனேயே சபைக்கு வருவேன். மக்கள் நிராகரித்தால் கைவசம் கல்வித் தகைமையும், தொழிலும் இருக்கின்றது.” – என்றார்.