1952 இல் ஆரம்பிக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, 1952 இல் நடைபெற்ற இரண்டாவது பாராளுமன்றத் தேர்தலில் கை சின்னத்திலும், கடைசியாக 2015 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிட்டது.

‘கதிரை’ மற்றும் ‘வெற்றிலை’ ஆகியன சின்னங்களின்கீழும் சுதந்திரக்கட்சி பொதுத்தேர்தல்களைஎதிர்கொண்டிருந்தாலும் – கூட்டணியின் தலைமைப் பதவி , பிரதமர் வேட்பாளர் ஆகியவற்றை பங்காளிகளுக்கு விட்டுக்கொடுத்தில்லை.

எனினும், 68 வருடங்களுக்கு பிறகு மேற்படி இரு விடயங்களையும் விட்டுக்கொடுத்தது மட்டுமல்லாது,  கூட்டணி என்ற போர்வையில் ‘மொட்டி’டம் சரணடைந்துள்ளது.

தேர்தல்களில் சுதந்திரக்கட்சி கடந்துவந்த பாதை

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து 1951 ஆம் ஆண்டு வெளியேறிய எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, 1952 செப்டம்பர் 2 ஆம் திகதி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார்.

1952 இல் நடைபெற்ற இலங்கையின் 2ஆவது பொதுத்தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15.52 சதவீத வாக்குகளைப்பெற்று 9 ஆசனங்களுடன் பிரதான எதிர்க்கட்சியானது.

அதன்பின்னர் 1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 39.53 சதவீத வாக்குகளுடன் 51 ஆசனங்களை வென்று ஆட்சியையும் கைப்பற்றும் அளவுக்கு அரசு வளர்ச்சி கண்டது. அதாவது ஐ.தே.கவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்குள் பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.

1959 செப்டம்பர் 26 ஆம் திகதி பண்டாரநாயக்க (60 வயது) சுட்டுப்படுகொலைசெய்யப்பட்ட பின்னர் தற்காலிக தலைவராக பொலன்னறுவை மாவட்டத்தை சேர்ந்த சி.பி.டி. சில்வா நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவி பண்டாரநாயக்கவின் பாரியாரான ஶ்ரீமாவிடம் கையளிக்கப்பட்டது. அவரும் கட்சியை வெற்றிகரமாக வழிநடத்தினார்.

1978 ஆம் ஆண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் 1982 ஆம் ஆண்டே முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமை பறிக்கப்பட்டதால் சுதந்திரக்கட்சியின் சார்பில் கை சின்னத்தில் கொப்பேகடுவவே போட்டியிட்டார்.

1988 இல் நடைபெற்ற இரண்டாவது ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக்கட்சி கை சின்னத்தில் களமிறங்கியது. ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க போட்டியிட்டார். 89 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் கை சின்னத்திலேயே சு.க. போட்டியிட்டது.

1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கூட்டணி அமைத்து கதிரை சின்னத்தில் போட்டியிட்டது. பிரதமர் சந்திரிக்கா களம்கண்டார். இறுதியில் ஐ.தே.கவின் 17 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது.

2000 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சு.கவின் தலைவர் சந்திரிக்கா தலைமையிலான கூட்டணியே கதிரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது.

2001 டிசம்பர் 05 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

2004 இல் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உருவாக்கப்பட்டதால் அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது.

அதன்பிறகு 2010, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களிலும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்கீழ் வெற்றிலை சின்னத்தில் களமிறங்கியது. சுதந்திரக்கட்சி சார்பிலேயே பிரதமர் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

ஆர்.சனத்