” நாடு இராணுவ ஆட்சியை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலைமை நீடித்தால் தாய்லாந்தில்போன்று நாடாளுமன்றத்தில்கூட இராணுவத்துக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கவேண்டிய நிலை உருவாகும்.” – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” பொலிஸாரால் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளுக்கு இன்று இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கென தனியான கட்டளைச்சட்டமொன்று இருக்கின்றது. விசாரணைப் பிரிவுகளுக்கான சரத்துகளும் உள்ளன. சாதாரண பொலிஸ் கட்டளைச்சட்டத்தின்படி, சிவிலியன்களுக்கான காவல்துறை செயற்பாடுகளில் இராணுவ பொலிஸார் (மில்டரி பொலிஸ்) ஈடுபடமுடியாது.

எனவே, போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட காரணங்களுக்காக இராணுவ பொலிஸாரால் செய்யப்படும் கைதுகள் யாவும் சட்டவிரோதமாகவே கருதப்படும்.

இத்தகைய செயற்பாடுமூலம் ஒரு புறத்தில் பொலிஸாருக்கு தொழில் கௌரவம், தொழில் பயிற்சி உட்பட சில பிரச்சினைகள் ஏற்படும்.
மறுபுறத்தில் யாரோ ஒருவரின் கட்டளையை ஏற்று – சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டு, இராணுவப் பொலிஸாரும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.இது பாரதூரமான விடயமாகும்.

மில்டரி பொலிஸ் என்பதில் பொலிஸ் என்ற பதம் இருப்பதால் சாதாரண பொலிஸ{ம், மில்டரி பொலிஸ{ம் ஒன்றாகாது.

நாட்டின் பாதுகாப்பை முப்படையினரிடம் ;ஒப்படைக்கவேண்டுமெனில் இராணுவ மற்றும் பொலிஸ் கட்டளைச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். முடியுமா ,இல்லையா என்பதை உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும்.

எனவே, தன்னிச்சையாக அதிகாரமற்ற தரப்புபொன்றுக்கு அவர்களுக்கு பொருத்தமற்ற பொறுப்பை ஒப்படைப்பது பாரதூரமான விடயமாகும்.
நாட்டின் அரசியலமைப்பும், சட்டமுமே மேன்மையானவை. அவற்றை மீறும் வகையில் செயற்படமுடியாது. இந்த கோட்பாடு ஜனாதிபதிக்கும் பொருந்தும்.

போர்காலத்தில் இராணுவம் சிவில் நடவடிக்கையில் ஈடுபட்டதை கண்டோம். விரும்பியோ, விரும்பாமலோ அதனை ஏற்கவேண்டியதாயிற்று. ஆனால், இன்று என்ன நடக்கின்றது? பொலிஸாருக்கு முழுமையாக செய்யக்கூடிய பணிகளில்கூட இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இராணுவம் ஈடுபடுத்தப்படுவதை நல்லது என கூறுபவர்களும் இருக்கின்றனர். இன்று போக்குவரத்து கடமையில் ஈடுபட்டவர்கள், நாளை காணி பிரச்சினையை தீர்க்க வரலாம். கொலை, கடத்தல் சம்பந்தமான விசாரணைகளில்கூட ஈடுபடமுடியும்.

இறுதியில் இது எங்கு சென்று நிற்கும்? நீதித்துறைக்கு இராணுவம் வரலாம். சில நாடுகளில் இராணுவத்துக்கு நாடாளுமன்றத்தில் ஒதுக்கீடு வழங்கப்படும். தாய்லாந்தில் அந்த நடைமுறை இருக்கின்றது. இங்கும் அப்படியொரு நிலை ஏற்படலாம். எமது நாட்டு பிரஜைகள் இதற்கு இடமளிக்கமாட்டார்கள் என நம்புகின்றோம்.

அதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியேற்று இன்றுடன் (நேற்று) 100 நாட்கள் ஆகின்றன. தன்னால் முடியாது என்பதை இக்காலப்பகுதியில் அவர் உறுதிப்படுத்திவிட்டார். தோல்வியடைந்த 100 நாட்களே இது.

ஆட்சியை பொறுப்பேற்று முதல் 100 நாட்களை எடுத்து, ஆராய்ந்தால் அரசாங்கத்தின் பயணம் எங்கு செல்கின்றது என்பதை அறியலாம். அந்தவகையில் இந்த 100 நாட்களுக்குள் ஜனாதிபதியின் இயலாமை வெளிச்சத்துக்கு வந்தது.

மருந்து தட்டுப்பாடு, பொருட்கள் விலை உயர்வு என மோசமான நிர்வாகம் இடம்பெற்றுவருகின்றது.” – என்றார்.