எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மே 7 ஆம் திகதி வெசாக் பண்டிகை வருவதால் மே முதல்வாரத்திலேயே பௌத்த ஆன்மீக நிகழ்வுகள் ஆரம்பமாகிவிடும்.

எனவேதான் அதற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துவதற்கும் அதற்கான ஏற்படைய திகதி ஏப்ரல் 25 எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளும், மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் திட்டமிட்ட அடிப்படையில் ஏப்ரல் 25 தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது.

இதற்காக மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அரசிதழை ஜனாதிபதி வெளியிடுவார். மார்ச் 12 முதல் 19 திகதிகளில் வேட்புமனுக்கள் கோரப்படும்.

அதேவேளை, பிரதான அரசியல் கட்சிகள் யாவும் இன்று முதல் தேர்தலுக்கான பூர்வாங்க நடவடிக்கையில் இறங்கவுள்ளன.

வேட்புமனு குழு அமைத்தல், தொகுதி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதல் என தேர்தல் காலத்துகே உரித்தான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

தேர்தல் செலவு

பொதுத்தேர்தலை நடத்துவதற்கு 7 ஆயிரம் மில்லியன் ரூபாவரை செலவாகக்கூடும் என தேர்தல் ஆணைக்குழு மதிப்பீடு செய்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கும், திறைசேரி அதிகாரிகளுக்குமிடையில் பொதுத்தேர்தல் தொடர்பில் விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.

இதன்போது பொதுத்தேர்தலுக்கான செலவு எவ்வளவு என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.

” உத்தேச மதிப்பீட்டின்படி பொதுத்தேர்தலுக்கான செலவு 5,500 மில்லியன் மற்றும் 6,000 மில்லியன் ரூபாவுக்கு இடைப்பட்டதாகும். வேட்பாளர்கள் அதிகமாக களமிறங்கும் பட்சத்தில் இத்தொகை 7000 மில்லியன்வரை உயரக்கூடும்.” என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் கடமைகளுக்கான பணியாளர்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரிக்ககூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, 2019 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களுக்கான செலவுகளில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவேண்டிய ஒரு பில்லியன் ரூபாயை செலுத்துமாறு திறைசேரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.