இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி களம் இறங்கி விளையாடிய இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான மயங்க் அகர்வால் (34), பிரித்வி ஷா (16) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இந்திய அணி குறைந்த ஓட்டங்களில் விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 122 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

அப்போது ரஹானே 38  ஓட்டங்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ஓட்டங்களுடனும்  (37 பந்து) களத்தில் இருந்தனர். அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.

தொடர்ந்து நேற்று முன்தினம் 2ஆவது நாள் ஆட்டம் நடந்தது. அதன் முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களைஎடுத்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரன்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் பிளண்டெல் ஆகியோர் களமிறங்கி விளையாடினர்.

அந்த அணியில் அதிக அளவாக வில்லியம்சன் (89), டெய்லர் (44) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். லாதம் (11), பிளண்டெல் (30), நிக்கோல்ஸ் (17) ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அந்த அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 71.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது.

வாட்லிங் (14), கிராண்ட்ஹோம் (4) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 51 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இதனை அடுத்து நேற்று 3ஆவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. இதில், நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 100.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ஓட்டங்கள் குவித்தது.

இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 183 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது.

இதன்பின் இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் அரை சதம் (58) விளாசினார். பிருத்வி ஷா (14), புஜாரா (11) மற்றும் கோஹ்லி (19) ஓட்டங்களில் வெளியேறினர்.

தொடர்ந்து இந்திய அணி 65 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ஓட்டங்களை எடுத்திருந்தது. ரஹானே (25), விகாரி (15) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

டிரன்ட் போல்ட் 3 விக்கெட்டுகளும், டிம் சவுதி ஒரு விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். நேற்றைய 3ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 39ஓட்டங்கள் பின்தங்கி இருந்தது.

இதன்பின்னர் இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. இதில், ரஹானே (29), விகாரி (15), பண்ட் (25), அஸ்வின் (4), இஷாந்த் சர்மா (12), பும்ரா (0) ஓட்டங்களில் வெளியேறினர்.

இதனால் 81 ஓவர்கள் முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முகமது சமி (2) ஓட்டங்களுடன் களத்தில் நின்றார்.

இதனை அடுத்து நியூசிலாந்து அணி 9 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை விளையாடியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லாதம் (7), பிளண்டெல் (2) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

1.4 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 9 ஓட்டங்களை சேர்த்தது. அந்த அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.