ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைத்து களமிறங்கியிருக்காவிட்டால் கோட்டாபய ராஜபக்ச தோல்வியடைந்திருப்பார் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி,ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு தரப்புகளையும் இணையுமாறு நாட்டு மக்கள் ஆணையிட்டார்கள். இதன்படி கூட்டணி அமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோம். இணைந்து பயணித்ததால்தான் வெற்றி சாத்தியமானது. அவ்வாறு இல்லாவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வெற்றிபெற்றிருக்கமுடியாது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளும் இணைந்து 69 இலட்சம் வாக்குகளைப்பெற்றன.

குறிப்பாக இரண்டாம் விருப்பு வாக்கை எண்ணாமல் இருக்கவேண்டுமாயின் 50 சதவீதத்தை தாண்டவேண்டும். 50 சதவீதம் என்பது 65 இலட்சம் வாக்குகளாகும். நாம் 69 இலட்சம் வாக்குகளையே பெற்றோம். அப்படியாயின் மேலதிகமாக 4 இலட்சம் வாக்குகளே கிடைத்தன.

அந்த 4 இலட்சம் வாக்குகள் மற்றைய தரப்புக்கு சென்றிருந்தால் நாம் தோல்வியடைந்திருப்போம். எனவே, இந்த 4 இலட்சம் வாக்குகளைப் பெறுவதற்கு சுதந்திரக்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லையா? இந்த உண்மை சில அடிப்படைவாதிகளுக்கு புரிவதில்லை.

மைத்திரிபால சிறிசேனவுக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட்டதுதான் அவர்களுக்கு பிரச்சினை. தனித்து களமிறங்க வேண்டும் என சிலர் கூறிவருகின்றனர். இப்படியான நான்கு ஐந்து பேருக்கு தேசிய அரசியல் என்றால் என்னவென்பது புரியவில்லை.தான் போட்டியிடும் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக, ஒட்டுமொத்தமாக சிந்திக்காமல் இருக்கின்றனர்.

இன்னும் சில நாட்களில் எமக்கு எதிரான சொற்போர் உக்கிரமடையலாம். நான் அரசியல் கட்சியொன்றின் செயலாளர். எனவே, அரசியலில் சிறுபிள்ளைகளாக இருப்பவர்களுக்கு இனி பதில் வழங்கமாட்டேன்.” – என்றார்.