” ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் திட்டமிட்ட அடிப்படையில் அபகரிக்கப்பட்டுவருகின்றது.-” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின்கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெறும் சில சம்பவங்களானவை தமிழர்களின் மனதை வேதனைக்குட்படுத்தும் செயல்களாகவே அமைந்துள்ளன.
குறிப்பாக தமிழர்களின் நிலங்களை அபகரிக்கின்ற ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது.இது அரசாங்கத்தின் வேலைத்திட்டமா அல்லது பிரதேசத்திலுள்ள பிரதிநிதிகளின் வேலைத்திட்டமா என புரியவில்லை.
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் இந்தியாவில் வாழ்ந்துவருகின்றனர்.
இதில் பெரும்பாலானவர்கள் வன்னியைச் சேர்ந்தவர்கள்.அவர்கள் இங்குவந்து வாழ்வதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படாததால் அங்கு தொடர்ந்தும் முகாம்களிலேயே இருந்துவருகின்றனர்.
எனவே, இவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பது பற்றியே அரசாங்கம் சிந்திக்கவேண்டும். ஆனால் இங்கு என்ன நடக்கின்றது? அவர்களின் பூர்வீகக் காணிகள் பறிக்கப்படுகின்றன.
குறிப்பாக வவுனியா மாவட்டத்தில், வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட மூன்று முறிப்பு என்ற கிராம அலுவலர் பிரிவிலுள்ள தச்சன் குளம் என்ற கிராமம் தமிழர்களின் பூர்வீக கிராமம்.
யுத்தம் காரணமாக அங்கிருந்தவர்கள் இடம்பெயர்ந்து இந்தியா சென்றனர். மேலும் சிலர் வவுனியாவில் ஏனைய பகுதிகளில் வாழ்கின்றனர். இவர்களின் கிராமத்தில் குறிப்பிட்ட பகுதியை இராணுவம் கைப்பற்றியுள்ளது.
ஏனைய பகுதியை ஆறுமாதங்களுக்கு முன்னர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள் அபகரீப்பதற்கு முயற்சித்தனர். எனினும், அப்போது அதற்கு இடமளிக்கப்படவில்லை.
ஆனால், ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தற்போது வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இருப்பர், சிங்கள மக்களுக்கு அக்காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறார். இரண்டு மாதங்களில் நடவடிக்கை முடிவுக்கு வரலாம் என கூறப்படுகின்றது.
இந்த நடவடிக்கை எல்லாம் அறிந்தும் ஆளுங்கட்சியிலுள்ள தமிழ் அரசியல் வாதிகள் மௌனியாக இருக்கின்றனர்.
அதேபோல் வடக்கில் சோதனைச்சாவடிகள் இல்லை என வடக்கிலுள்ள அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
ஜனாதிபதி தேர்தலின் போது அவருக்கு வாக்குகள் விழவில்லை. எனவேதான் பிரதமரிடம் நல்லபெயர் வாங்குவதற்காக இப்படி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.
எனவே, தமிழர்களின் பூர்வீக நிலங்களை திட்டமிட்ட அடிப்படையில் பறிப்பது எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆபத்தை கொண்டுவரும் என்பதால் அது உடனடியாக கைவிடப்படவேண்டும்.
அதேவேளை, தலைவர் பிரபாகரன் இருந்தகாலத்தில்போல் போரிடமுடியாது என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். ஆயுதமேந்தி போராட பிரபாகரன் முயற்சிக்கவில்லை.
ஆனால், அந்த நேர களச்சூழ்நிலை, உங்களின் (அரசாங்கத்தின்) அலட்சியப்போக்கு, தமிழ் மக்கள்மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறைதான் அவரை ஆயுதம் ஏந்த வைத்தது.” என்றார் கூட்டமைப்பு சார்ள்ஸ்.