அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

41 வயதான பிரயண்ட் அமெரிக்காவின் கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் ஆவார். லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர், 5 முறை என்.பி.ஏ. சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

கூடைப்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த பிரயண்ட், ஒலிம்பிக் போட்டிகளில் இருமுறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரிலிருந்து 65 கி.மீ. தூரத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிரயண்ட் உயிரிழந்தார். பிரயண்டுடன் ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரும் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்த விபத்தில் பிரயண்டுடன் பயணம் செய்த அவரது 13வயது மகள் ஜியானாவும் உயிரிழந்தார். உயிரிழந்த பிரயண்டுக்கு வான்சா என்ற மனைவியும் ஜியானா உட்பட 4 மகள்கள் உள்ளனர்.

பிரயண்ட்டின் அகால மரணம் கூடைப்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பிரயண்டின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரயண்டின் ரசிகர்கள் இணையதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.