“ முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க என்னை கொலை செய்வதற்காக துப்பாக்கிசுடும் பயிற்சி எடுத்துள்ளார். இது படுபயங்கரமான செயலாகும். எனவே, இது தொடர்பில் உரிய நடவடிக்கையை முன்னெடுங்கள்.”

இவ்வாறு சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.

நாடாளுமன்றம் நேற்று (7) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே,

“முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதியமைச்சராக இருந்த ரஞ்சன் ராமநாயக்கவுக்குமிடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான குரல்பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது.

“மஹிந்தானந்தவை கொலை செய்வதற்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி எடுக்கின்றேன்.”  என்று ரஞ்சன் ராமநாயக்க ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறும் பதிவும் அதில் இடம்பெற்றுள்ளது.

இதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்குமாறு ரணில் விக்கிரமசிங்கவும் பதில் வழங்குகிறார்.

எனவே, என்னை கொலைசெய்வதற்காக ரணில் விக்கிரமசிங்கவும், ரஞ்சன் ராமநாயக்கவும் இணைந்து சூழ்ச்சி செய்தமை உறுதியாகியுள்ளது. இது படு பயங்கரமான செயலாகும்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் கடந்த பெப்ரவரி மாதம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றது. ரஞ்சன் ராமநாயக்க பயிற்சியில் ஈடுபடும்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றது.

அறியாமையால் நடந்தது என பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறு கூறுமாறு ரணில் விக்கிரமசிங்கவே ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கு எதிராக நாளை (இன்று) சி.ஐ.டி. மற்றும் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்து சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளேன். இதற்கு இணையாக சபாநாயகர் என்ற வகையில் நாடாளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், விடயம் கவனத்தில் எடுக்கப்படும் என அறிவித்தார்.