இந்தியாவின் தென்மாநிலத்திலிருந்து 1815 களில் இலங்கை நோக்கிவந்த மலையக மக்கள் வரும் வழியிலும், வந்துகுடியேறிய பின்னரும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

அந்தக் கொடூரத்தை-பேரவத்தை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரித்து விடமுடியாது.

வறுமையின் கோரப்பிடியால் துன்பமேகங்களை தோளில் சுமந்துக்கொண்டு பஞ்சம்பிழைப்பதற்காக வெறுங்கையுடன் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் அவர்கள் கால்பதித்திருந்தாலும், கலையுணர்வு என்பது அவர்களிடையே கடல்போல் காணப்பட்டது.

இதனால்தான் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பெரும்பாடுபட்டு தோட்டப்பகுதிகளில் கலையுணர்வையும், கூத்துகளையும் கட்டிக்காத்து அவற்றை வேரூன்றச்செய்தனர்.

காடுகளை வளமாக்கி நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்புசெய்ததுமட்டுமின்றி கலைகளுக்கும் உயிரூட்டினர்.

ஆனால், மலையகத்துக்கே உரிய – தோட்டப்பகுதிகளில் பெரும்பாலும் நடைபெறும் கலைகளும், கூத்துகளும் இன்று அழிவடைந்துவருகின்றன.

கரகம், கும்மி, கோலாட்டம் ஆகிய ஆட்டக்கலைகள் ஆங்காங்கே நடைபெற்றுவருகின்றபோதிலும், அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, முனியான்டிக் கூத்து போன்றன ஒருசில இடங்களிலேயே இடம்பெறுகின்றன.

சுருக்கமாகச்சொல்லப்போனால் இன்னும் சில வருடங்களில் இப்படியொரு கூத்து இருந்ததா என கேட்கும்நிலை உருவாகினால்கூட வியப்பில்லை.

எனினும், மலையகத்தில் பல தோட்டங்களிலும் மாசிமாதத்தில் காமன்கூத்து ஆடப்படுகின்றது . இதிகாசத்துடன் தொடர்புடைய இந்த கூத்தானது எம்மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அழிவுக்கு மத்தியிலும் தனதிருப்பை இந்த கூத்துதக்கவைத்துக்கொண்டுள்ளமை வரவேற்கப்படவேண்டிய விடயமாகும்.

காமன் கூத்து என்றால் என்ன?

பரம்பொருளான சிவபெருமான் திருக்கையால மழையில் ஆழ்ந்த தவத்துக்குள் மூழ்கியதால் பிரபஞ்சமே ஆட்டம்காண தொடங்கியதாம். இதனால், பாரிய அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இனியும் மௌனம் காத்தால் பேரழிவு ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தில் இந்திரலோகம் சென்ற தேவர்கள், நிலைமையை இந்திரனிடம் எடுத்துரைத்துள்ளனர்.

சிவனின் தவத்தைக் கலைத்தால் மாத்திரமே பேரழிவிலிருந்து உலகைக் காக்கலாம் என்பதை  அறிந்துக்கொண்ட இந்திரன், அதை செய்யக்கூடிய வல்லமை மன்தமனுக்கே இருக்கின்றது என்பதையும் உணர்த்துக்கொண்டார்.

இப்படியொரு விடயம் இருக்கின்றது என்ற தூதை மதனுக்கு அனுப்பினார் இந்திரன். ( அதை எடுத்துச்செல்பவர்தான் தூதன். இவர் பயங்கரமாக தோற்றமளிப்பார். தீப்பந்தங்கள் சகிதமே திருமணம் நடக்கும் இடத்துக்குச்செல்வார்.)

தூதுவன் அங்குசெல்லும்போது ரதிக்கும், மதனுக்குமிடையில் திருமணம் நடைபெற்றிருக்கும். மாவிளக்குப்பூஜை, பச்சைவில் போன்றனவும் இதற்கிடையில்தான் நடைபெறும்.

தூதுவனின் செய்தியை கேட்டதும், மலர்க் கணைகளைத் தொடுத்து தவத்தைக் கலைக்க தான் தயார் என்ற தகவலை மற்றுமொரு தூதுவன் ஊடாக இந்திரசபைக்கு மதன் அனுப்புவார்.( இதன்போது மற்றுமொரு தூதுவன் வருவார்)

ஈசனின் பலம் அறிந்த ரதி, தவத்தைக் கலைக்க வேண்டாம் என மன்மதனிடம் எடுத்துக்கூற, அதை அவர் கணக்கில் எடுக்கவில்லை.இந்த சம்பவத்துக்கு நிகரான வகையில் வீரம்புத்திரன், காளி, மோகினி போன்ற பாத்திரங்கள் வரும்.

(தட்சனின் யாகம்தான் சிவனை சினம்கொள்ள வைத்து, ஆழ்ந்த தவநிலைக்கு தள்ளியது. நீதி கேட்டுசென்ற பார்வதியை தந்தை தட்சன் அவமதிக்க அவர், யாக தீயில் பாய்ந்து உயிர் துறப்பார்.

இதனால் தட்சனை அழிக்க சிவன் வீரபுத்தினரையும், காளியையும் அனுப்புவார். காமன் கூத்து நடைபெறும்வேளையில் தட்சன் யாகம் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.)

அதன்பின்னர் ஈசனின் தவத்தை மதன் கலைப்பார். சிவனின் சீற்றம் கொண்ட பார்வையால் மதன் அழிந்துபோய்விடுவார்.இந்த தகவலை எரி தூதுவர் ஒருவரே ரதிக்கு எடுத்துச்செல்வார். அதன்பின்னர், தூதூவன், எமன் ஆகிய இருவர் மதனின் உயிரைக் காவிச்செல்ல வருவார்கள்.

அவர்கள் வந்தபின்னர், ரதியின் ஒப்பாரி புராணம் ஆரம்பமாகும். தனது கணவரை உயிர்ப்பிக்குமாறு அவர் சிவனிடம் மன்றாடுவார்.

இரக்கம்கொண்ட ஈசன், மூன்று நாட்களுக்கு பிறகு மதனுக்கு உயிர் கொடுப்பார். இந்நிகழ்வு உயிர் எழுப்புதல் என அழைக்கப்படும்.

மதன் எரிக்கப்பட்ட நாள் முதல் உயிர்பித்தல் நிகழ்வு நடக்கும்வரை மதன் வேடம் தரிப்பவர் கவனமாகவே இருக்க வேண்டும். அவர் வேறு எங்கும் செல்லக்கூடாது.

காமன்கூத்துப்பாடல், கோமாளி பாத்திரம், தப்படித்தல் என மேலும் பல அம்சங்கள் இருக்கின்றன. மலையகத்தில் பல பகுதிகளிலும் மாசிமாதம் நடைபெறும் காமன்கூத்து நிகழ்வின் சுருக்கமான விளக்கமே இது.

ஒவ்வொரு தோட்டத்திலும் வெவ்வேறான முறையில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

( தொடரும்)