ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மைத்திரிபால சிறிசேன பச்சைக்கொடி காட்டியிருந்தாலும் ரணில் விக்கிரமசிங்கவால் – இறுதி நேரத்தில் அவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்றிரவு ஒளிபரப்பட்ட அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” 2018 இல் நடைபெற்ற உள்ளாட்சிசபைத் தேர்தலின்போது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 15 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தது.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறவேண்டுமாயின் சுதந்திரக்கட்சியின் ஆதரவு அவசியம் என்பதை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனகூட ஏற்றுக்கொண்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துமாறும், அவர் ஆதரவு வழங்கினால் சுமார் ஏழரை இலட்சம் வாக்குகள்வரை கிடைக்கலாம் என்றும் கட்சியிடம் யோசனை முன்வைத்தேன்.

இதன்அடிப்படையில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரியுடன் கலந்துரையாடினோம். ஆதரவு வழங்க முடியாது என அவர் கூறவில்லை.

ரணில் விக்கிரமசிங்க மேடைஏறுவதுதான் சர்ச்சையாக இருந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் மைத்திரி நிச்சயம் ஆதரவு வழங்கியிருப்பார் என நம்புகின்றேன்.

அவ்வாறு வழங்கியிருந்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளில் ஏழரை இலட்சம் வாக்குகள் குறைந்து, அது சஜித்தின் வாக்கு வங்கியில் சேர்ந்திருக்கும்.

55 இலட்சம் வாக்குகளுடன் ஏழரை இலட்சத்தை கூட்டினால் 62 இலட்சம் வாக்குகள் சஜித்துக்கு கிடைத்திருக்கும்.

கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குகளில் ஏழரை இலட்சம் வாக்குகளை கழித்தால் 61 இலட்சத்து 50 ஆயிரம் வாக்குகளே கிடைத்திருக்கும். இதன் அடிப்படையில் சஜித் வெற்றிபெற்றிருப்பார்.” என்றார் அசோக அபேசிங்க எம்.பி.