இந்தியாவில் கால்நடை பெண் மருத்துவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவராக பணியாற்றி வந்த பிரியங்கா ரெட்டி (வயது 27) என்பவர் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சாத்நகர் பகுதியில் சுங்க சாவடி அருகே பாலம் ஒன்றின் கீழ் எரித்து கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அவர், ஒரு வேலையாக கச்சிபவுலி பகுதிக்கு சென்றுள்ளார். சுங்க சாவடி அருகே வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தனியார் வாகனத்தில் கச்சிபவுலிக்கு சென்றுள்ளார். திரும்பி வந்தபொழுது அவரது வாகனம் பழுதடைந்து இருந்துள்ளது.

இதனால் தனது சகோதரியிடம் செல்போன் வழியே இரவு 9.22 மணியளவில் பேசிய அவரிடம், சுங்க சாவடியில் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நிற்கும்படி சகோதரி கூறியுள்ளார்.

ஆனால் அந்த பகுதி அசுத்தம் நிறைந்துள்ளது. அதனால் அங்கே நிற்க முடியவில்லை என பிரியங்கா கூறியுள்ளார்.

பின்னர் 9.44 மணிக்கு தொடர்பு கொண்டபொழுது பிரியங்காவின் செல்போன் துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சுங்க சாவடிக்கு சென்று அவரை தேடியுள்ளனர். இதேவேளையில் அங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் உடல் ஒன்று எரிந்து கிடக்கிறது என பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்பு குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் கொல்லப்பட்டவர் பிரியங்கா என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.

அவர் சுங்க சாவடி அருகே தனியான பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டு, கற்பழிக்கப்பட்டு பின்பு எரித்து கொல்லப்பட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுபற்றி தொடர்ந்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

பொலிஸாரின் விசாரணையில், பெண் மருத்துவர் 4 பேரால் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் அனைத்தும் ஒரு மணிநேரத்தில் நடந்துள்ளது. இரவு 10.20 மணியளவில் உயிரிழந்த அவரது உடலை தங்களது வாகனத்தில் வைத்து 10.28 மணியளவில் எடுத்து சென்றுள்ளனர்.

ஆரீப் மற்றும் நவீன் இருவரும் இரு சக்கர வாகனத்தினை எடுத்து சென்று கொத்தூர் கிராமத்தில் விட்டுள்ளனர். வாகனத்தில் இருந்து நம்பர் பிளேட்டை எடுத்து விட்டனர். மற்ற 2 பேரும் லாரியில் சென்றுள்ளனர்.

1 மணியளவில் பெட்ரோல் வாங்க 2 இடங்களில் முயற்சித்து உள்ளனர். பின்னர் 2.30 மணியளவில் உடலுக்கு தீ வைத்து எரித்து உள்ளனர்.

பின்பு மீண்டும் ஆட்டாபூர் பகுதிக்கு வந்து லாரியில் இருந்த செங்கற்களை இறக்கி விட்டு கலைந்து சென்றுள்ளனர்.

இந்த வழக்கில் முகமது ஆரீப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் சின்டகுன்டா சென்னகேசவலு ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றி சைபராபாத் பொலிஸார் கூறும்பொழுது, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க செய்யும் வகையில் இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் ஒப்படைக்க கோரிக்கை வைப்போம் என கூறினர்.

இந்நிலையில், விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி யாரும் இல்லாத நிலையில், ஷத்நகர் காவல் நிலையத்தில் இருந்த மாஜிஸ்திரேட், கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை அடுத்து 4 பேரும் மகபூப்நகர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையம் முன் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிறைந்த நிலை காணப்பட்டது.