2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மத்திய மாகாணத்திலுள்ள 21 தேர்தல் தொகுதிகளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 10 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 11 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கண்டி மாவட்டத்தில் 11 தொகுதிகளில் வெற்றிநடைபோட்ட அன்னத்தால் இம்முறை (2019) 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றியை தக்கவைத்துக்கொள்ளகூடியதாக இருந்துள்ளது.

ஹரிஸ்பத்துவ,தெல்தெனிய, செங்கடகல, யட்டிநுவர, குண்டசாலை ஆகிய 5 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. குறித்த தொகுதிகளில் மொட்டு மலர்ந்துள்ளது. அத்துடன், கலகெதர, உடதும்பர ஆகிய இரு தொகுதிகளிலும் மஹிந்த அணி வெற்றியை தக்கவைத்துக்கொண்டது.

கம்பளை, நாவலப்பிட்டிய, ஹேவாஹெட்ட, உடுநுவர, மஹநுவர, பாத்ததும்பர ஆகிய 6 தொகுதிகளிலும் ‘அன்னம்’ கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

இதில் குறிப்பாக கம்பளை, நாவலப்பிட்டிய, ஹோவாஹெட்ட, பாத்ததும்பர ஆகிய தொகுதிகள் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமாரின் அரசியல் ஆதிக்கம் நிறைந்த தொகுதிகளாகும்.

அதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கடந்தமுறை ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவளித்திருந்தார்கள். இம்முறை கோட்டாவுக்கே சுதந்திரக்கட்சி முழுமையாக நேசக்கரம் நீட்டியிருந்தது. தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தியே பிரசாரமும் இடம்பெற்றது.

எனவே, கண்டி மாவட்டத்தில் பின்னடைவு ஏற்படுவதற்கு இதுவும் காரணமென கருதப்படுகின்றது.

மாத்தளை மாவட்டம்

மாத்தளை மாவட்டத்திலுள்ள மாத்தளை, லக்கல, தம்புள்ளை, ரத்தொட்டை ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார்.

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரத்தொட்டை தொகுதியில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவே வெற்றிபெற்றிருந்தார்.

நுவரெலியா மாவட்டம்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை, வலப்பனை, ஹங்குராங்கெத்த, நுவரெலியா – மஸ்கெலியா ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றுள்ளார்.

இலங்கையில் 1982 முதல் 2019 வரை நடைபெற்றுள்ள 7 ஜனாதிபதி தேர்தல்களில் நுவரெலியா மாவட்டத்தில் 7 தடவைகள் ஐக்கிய தேசியக்கட்சியே முதல் இடத்தை பிடித்துள்ளது.

1994 இல் நடைபெற்ற தேர்தலில் மாத்திரமே 52 ஆயிரத்து வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது.

2005, 2015,2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிநடைபோட்டுள்ளது ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான கூட்டணி.