திருச்சி மணப்பாறை அருகே 25 ஆம திகதி மாலை 5.40 மணிக்கு விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 60 மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன. ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது.

30 அடி மட்டுமே தோண்டப்பட்ட நிலையில் முதல் இயந்திரம் பழுதடைந்தது, இதனையடுத்து 2வது இயந்திரம் கொண்டுவரப்பட்டு, சுஜித் விழுந்த ஆழ்துளை அருகே 3மீ தூரத்தில் 2வது குழி தோண்டப்பட்டு வருகிறது.

காலை சுமார் 4:30 மணியளவில் இயந்திரத்தில் பல் சக்கரத்தில் பழுது ஏற்பட்டது. வெல்டிங் மூலம் பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் துளையிடும் பணி துவங்கியது. குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

கடினமான பாறைகள் இருப்பதால் 2-வது ரிக் இயந்திரத்தின் மூலமும் துளையிடும் பணி தாமதமாகி உள்ளது. கடந்த 5 மணி நேரத்தில் மேற்கொண்டு 10 அடி மட்டுமே துளையிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துளையிடும் இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் வேகமாக துளையிட முடியவில்லை எனத்தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகிறது.