2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச, அநுரகுமார திஸாநாயக்க உட்பட 35 வேட்பாளர்கள் இன்று (07) முற்பகல் வேட்புமனுக்கலை தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்களை தாக்கல்செய்வதற்கு 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தாலும் இறுதிநேரத்தில் குமார வெல்கம உட்பட அறுவர் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கு இன்று முற்பகல் 9 மணிமுதல் 11 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல்  கட்சிகளின் சார்பில் 18 வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் சார்பில் 2 வேட்பாளர்களும், சுயேட்சையாக 15 வேட்பாளர்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு ஆட்சேபனை தெரிவிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டது. இதன்போது இரண்டு முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவை தேர்தல் ஆணைக்குழவால் நிராகரிக்கப்பட்டது.

தேர்தல் ஆணைக்குழு அமைந்துள்ள இராஜகிரிய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. வீதிகளும் மூடப்பட்டன. கட்சிகளின் ஆதரவாளர்களும் பெருமளவு அப்பகுதியில் குவிந்திருந்தனர். அரசியல் பிரமுகர்களும் படையெடுத்திருந்தனர்.

வேட்புமனு தாக்கலின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

அதேவேளை, தேர்தல் சட்டத்திட்டங்கள்மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை விடுத்தார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் அதிகளவு வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தேர்தலாக இது அமைந்துள்ளது. இதனால் நீளமான வாக்குச்சீட்டையும் அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரை ஆரம்பம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் தேர்தல் பரப்புரையை ஆரம்பிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக்கூட்டம்  ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஒக்டோபர் 8 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அவரது சொந்த ஊரான அநுராதபுரம், தம்புத்தேகமவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

‘எமது நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின்கீழ் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பின்னர் பலகோணங்களில் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பிரசாரக்கூட்டம் ஒக்டோபர் 9 ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகள் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றவுள்ளனர்.

அத்துடன், மாவட்டம், தொகுதி, கிராமம் மற்றும் வீட்டுக்கு வீடு , இலத்திரனியல் பிரசாரம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பலவழிகளில் பரப்புரை சமரை முன்னெடுக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் 10 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஒக்டோபர் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரமாண்ட பிரசாரக் கூட்டம் காலிமுகத்திடலில் நடைபெறும்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகளும் பங்கேற்கவுள்ளனர்.