ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை ஒக்டோபர் 7 ஆம் திகதி தாக்கல்செய்த பின்னர், தேர்தல் பரப்புரையை ஆரம்பிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதன்படி தேசிய மக்கள் சக்தியின் முதலாவது பிரதான தேர்தல் பிரசாரக்கூட்டம்  ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஒக்டோபர் 8 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அவரது சொந்த ஊரான அநுராதபுரம், தம்புத்தேகமவில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

‘எமது நாட்டை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின்கீழ் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்பின்னர் பலகோணங்களில் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான பிரசாரக்கூட்டம் ஒக்டோபர் 9 ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடைபெறவுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகள் கூட்டத்தில் பங்கேற்று, உரையாற்றவுள்ளனர்.

அத்துடன், மாவட்டம், தொகுதி, கிராமம் மற்றும் வீட்டுக்கு வீடு , இலத்திரனியல் பிரசாரம் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் பலவழிகளில் பரப்புரை சமரை முன்னெடுக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியும் 10 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார ஆட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது. ஒக்டோபர் 10 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு முதலாவது பிரமாண்ட பிரசாரக் கூட்டம் காலிமுகத்திடலில் நடைபெறும்.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் சஜித்துக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகளும் பங்கேற்கவுள்ளனர்.