” கூட்டணி என்ற போர்வையில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சரணடைய வைப்பதற்கான முயற்சியில் கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. இந்த சூழ்ச்சி வலையில் ஒருபோதும் எமது கட்சி சிக்காது. தன்மானத்தை இழந்து கூட்டணி அமைக்க தயாரில்லை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இந்த நாட்டை ஆட்சிசெய்த கட்சியாகும். பலபேருக்கு அரசியல் முகவரியை பெற்றுக்கொடுத்தது. ஆனால், வளர்த்துவிட்ட தாய்க்கட்சிக்கே துரோகமிழைக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

போலி பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டதாலேயே கடந்த உள்ளாட்சி சபைத் தேர்தலில் எமக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. மக்கள் தற்போது விழித்துக்கொண்டுள்ளனர். எனவே, ஜனாதிபதித் தேர்தலில் தனித்து போட்டியிடக்கூடிய பலம் எமக்கு இருக்கின்றது.

கூட்டணி அமைத்துதான் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கட்சி முடிவெடுக்கும் பட்சத்தில் அதற்கு நான் கட்டுபடுவேன். ஆனால், கொள்கைகளை விட்டுக்கொடுத்து, சரணடையும் பாணியில் கூட்டு சேர்வதற்கு நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.” என்றார்.