ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட நல்லிருக்கை கிராமம், இந்த கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களின் முக்கிய தேவையான குடிநீர் கிடைக்கவில்லை என்கின்றனர்.

காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் இக்கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டு குடிநீர் குழாய், இரண்டு கி.மீ தூரத்தில் உடைந்து சேதம் அடைந்ததால் இன்று வரை காவிரி தண்ணீரை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

நல்லிருக்கையில் கண்மாயில் நான்கு கிணறுகள் அமைக்கபட்டும் தண்ணீர் இல்லாததால் பயன்படவில்லை, டேங்க் இருக்கிறது, குழாய் இருக்கிறது ஆனால் தண்ணீர் மட்டும் இல்லை என்பதே இந்த ஊரின் நிலை.

தூர் வாரப்படாமலும், முறையான பராமரிப்பின்றியும் காய்ந்து வறண்ட பூமியாக காட்சி தருகிறது கண்மாய்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மாரியம்மாள் எங்கள் நல்லிருக்கை கிராமத்திற்கு ‘காவிரி தண்ணீர் வந்து மூன்று ஆண்டு ஆகிறது, ஒன்றுக்கு நான்கு கிணறுகள் உள்ளன. ஆனால் கிணற்றில் மண்ணும் பாறையும் மட்டுமே’ உள்ளன.

கிணற்றில் தண்ணீர் கிடையாது. தண்ணீர் எடுக்க காலையில் வந்தால் ‘சாப்பிடகூட முடியாமல் பசியும், பட்டினியுமாக காத்து இருந்தால்தான் ஆளுக்கு ஒரு குடம் இரண்டு குடம் தண்ணீர் கிடைக்கும’ என்றார்.