21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அழைப்பையேற்று விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு, சபாநாயகர் கருஜயசூரிய ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்றம் இன்று (09) பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தான் ஏன் தெரிவுக்குழுவின் அழைப்பை நிராகரித்தார் என்பதற்கான காரணத்தை விளக்கினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், ” 21/4 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்ட பின்னரே, இவ்விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

எனவே, தெரிவுக்குழு நடவடிக்கையை இடைநிறுத்த முடியாது. ஜனாதிபதியின் செயலாளரால் எனக்கு அனுப்பட்ட கடிதம் தொடர்பில் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தினேன். அதனை சபையில் சமர்ப்பிப்பதற்கான தேவை எழவில்லை.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அழைப்பு விடுத்தால் அதில் பங்கேற்பதே சிறந்தது. அவ்வாறு இல்லாவிட்டால் அது நாடாளுமன்றத்தை அவமதித்த செயலாகவே கருதப்படும்.” என்று கூறினார்.