1815 ஆம் ஆண்டில் கண்டி இராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றிய பின்னர் – மலையகமெங்கும் வெள்ளையர்களின் ஆதிக்கம் கோலோச்சியது. அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் என முப்பொறிமுறைகளும் அவர்களின் கட்டளைகளுக்கேற்பவே சுழன்றன.

இந்நிலையில் 1824 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பேர்ட் என்பவரால் இலங்கையில் கோப்பி பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், காலப்போக்கில் ஒருவகையான நோய்த்தாக்கத்தால் கோப்பி பயிர்செய்கை முற்றாக அழிவடைந்தது.

இதையடுத்தே ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் 1867 ஆம் ஆண்டில் நூல் கந்துர எனும் இடத்தில் தேயிலை பயிர்செய்கை ஆரம்பிக்கப்பட்டது. ( இலங்கையிலுள்ள நீளமான தேயிலைத் தொழிற்சாலை இப்பகுதியிலேயே உள்ளது.)

1827 ஆம் ஆண்டிலேயே தென்னிந்தியாவிலிருந்து முதலாவது தொழிலாளி இலங்கையை வந்தடைந்தார் எனக் கூறப்பட்டாலும், தேயிலைப் பயிர்செய்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே கொத்துக் கொத்தாக வந்து குவிந்தனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

கரையோரப்பகுதிகளிலிருந்து கால்நடையாக பெருந்தோட்டப்பகுதிகளுக்கு சென்றடைந்த மக்களுக்கு வசிப்பதற்கு உரிய இடம் இருக்கவில்லை. பின்னர் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மாட்டுப்பட்டிபோல் லயன்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.

பஞ்சம் பிழைப்பதற்காக வெறுங்கையுடன் வந்த மக்கள் வேறுவழியின்றி, அவற்றில் குடியேறினர். காலம் காற்றாகப் பறந்தது. சுமைகள் அதிகரித்ததே தவிர, வலிகள் நீக்கி வழி பிறக்கவே இல்லை.

‘கோச்சி லயன்’

அப்படி கட்டப்பட்ட லயன்களுள் ஒன்றுதான் இந்த ‘60 ஆம் காம்பரா’வாகும்.

இலங்கையில் கட்டப்பட்ட முதலாவது மிகவும் நீளமான லயனாக இது கருதப்படுவதுடன், நூறு வருடங்களுக்கு மேல் பழமையானதாகவும் விளங்குகின்றது.

புஸல்லாவை நகரிலிருந்து சுமார் 4 கிலோமீற்றர் தூரத்திலேயே ரொச்சைல்ட் தோட்டம் அமைந்துள்ளது. ( ROTHSCHILD ESTATE) அங்குள்ள Y.R.C. பிரிவில் அமைந்துள்ள குறித்த லயன் தொகுதியை, தோட்ட மக்கள் ‘கோச்சி’ லயன் என்றும் விளிக்கின்றனர்.

நீளமான லயன் எப்போது கட்டப்பட்டது?

இலங்கையில் கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு, களுத்துறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களில் பெருந்தோட்டங்களை அண்டியப்பகுதிகளில் லயன் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

சராசரியாக ஒரு லயன் குடியிருப்பில் ஒரு புறத்தில் 10 வீடுகளும், மறுபுறத்தில் 10 வீடுகளுமாக குறைந்தபட்சம் 20 அறைகள் ( காம்பரா) அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், ரொச்சைல்ட் தோட்டத்திலுள்ள மேற்படி லயன் குடியிருப்பில் ஒரு புறத்தில் 28 வீடுகளும், மறுபுறத்தில் 28 அறைகளும் கட்டப்பட்டுள்ளன.

கோடிபக்கங்கள் இல்லை. கோடி பக்கம் அமைந்திருக்கும் பகுதிகளில் தலா இரண்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரு லயன் குடியிருப்பின் 60 காம்பராக்கள் – அறைகள் கட்டப்பட்டுள்ளன.

எனவே, இலங்கையிலுள்ள லயன்களில் மிகவும் நீளமான ( முதலாவதாகக் கட்டப்பபட்ட நீளமான) லயமாக இதுவே கருதப்படுகின்றது என்றும், இவற்றை பார்வையிடுவதற்கு முன்னர் சுற்றுல்லாப் பயணிகள் படையெடுத்து வந்தனர் என்றும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், எப்போது நிர்மாணிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை அவர்கள் அறிந்துவைத்திருக்கவில்லை. எனினும், 1870 இற்கும் 1890 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

குறித்த பகுதியிலுள்ள தொழிற்சாலையானது 1839 ஆம் ஆண்டில் – அதாவது கோப்பி யுகத்தின்போது கட்டப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதால், லயனும் அக்காலப்பகுதிக்குள் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.

லயன் குடியிருப்பில் இதுவரையில் இரண்டு தடவைகள் கூரைகள் மாற்றப்பட்டுள்ளன. மக்கள் தமது சொந்தப் பணத்தில் வீடுகளை புனரமைத்துள்ளனர். இருந்தாலும் 20 சதவீதமான வீடுகள் அன்று எப்படியோ இன்னும் அப்படியேதான் என்ற அவலநிலையில் காட்சிதருகின்றன.

லயன் என்ற இருட்டறைக்குள் சிக்கித்தவித்த பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிலிருந்து இன்னும் முழுமையாக விடுதலை கிடைக்கவில்லை. தற்போதுதான் லயன்கள் ஒழிக்கப்பட்டு, மக்களுக்கு தனிவீடுகள்

அமைத்துக்கொடுக்கப்பட்டுவருகின்றன. தனிவீட்டுத் திட்டம் முழுமையாக வெற்றிபெறுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது இறைவனுக்கே வெளிச்சம்.!

மலையகத்திலிருந்து லயன் வீடுகள் முழுமையாக இல்லாதொழிக்கப்படுமானால், குறித்த லயன் குடியிருப்பு பகுதியை அருங்காட்சியமாக மாற்றியமைத்து, எம்மவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களுடன் தொடர்புடைய பொருட்களை அங்கு காட்சிப்படுத்தலாம்.

எழுத்து (எஸ். பிரதா – தெற்கு மடக்கும்புர, வட்டகொடை)