வழமையான பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் போதுமான கால அவகாசமும் முன்னறிவித்தலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

எனினும், சில சூழ்நிலைகளில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை விவாதத்துக்கு எடுக்கவேண்டி இருக்கும்.

( உதாரணம், நாட்டில் விவசாயத்துக்கு தற்போது சேனா எனப்படுகின்ற படைப்புழு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இது குறித்து சபையின் கவனத்தை ஈர்க்கவேண்டும். இப்படியான விடயங்களே அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படும்.

எனவே, இந்த நோக்கங்களுக்காக நிலையியற் கட்டளைகள் ஒத்திவைப்புப் பிரேரணைகளுக்கான விவாதங்களுக்கான ஏற்பாடுகளை கொண்டுள்ளது. ( நிலையியற் கட்டளைகள் என்றால் என்னவென்பதை அடுத்து வரும் ‘நிலையியற் கட்டளைகள் என்றால் என்ன’ என்ற பதிவில் விரிவாக பார்ப்போம்.)

நிலையியற் கட்டளை 17 இன் கீழ் ஒத்திவைப்புப் பிரேரணைகளுக்கான
செயல்முறைகள்

எம்.பியொருவர்,ஒரே நாளில் ( சபை அமர்வு நடைபெறும் தினத்தில்) ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றைச் சமர்ப்பிக்க வேண்டுமானால் அது குறித்து சபாநாயகருக்கு எழுத்து மூலமாக அறிவித்து, அவரின் அனுமதியைப் பெறவேண்டும்.

அனுமதி கிடைத்திருக்கும் பட்சத்தில் பாராளுமன்ற கேள்வி நேரத்துக்குப் பின்னர் அவருடைய பிரேரணையைப் பிரேரித்து சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம்.

நாடாளுமன்றத்தின் அனுமதி வழங்கப்படாதவிடத்து, இருபதுக்குக் குறையாத உறுப்பினர்கள், யோசனையை முன்வைக்கும் எம்.பியை ஆதரித்து எழுந்து நின்றால் அதற்குரிய அனுமதி வழங்கப்படவேண்டும். அதன்பின்னர் விவாதம் ஆரம்பமாகும்.

எனினும், பிரேரிக்கப்பட்ட ஒத்திவைப்பு பிரேரணையை ஏற்றுக்கொள்ள சபாநாயகர் மறுப்பாரானால், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட எம்.பி, சபாநாயகரிடம் கேள்வி எழுப்பலாம். பின்னர் மறுக்கப்பட்டதற்கான காரணங்களை சபாநாயகர் தெளிவுபடுத்துவார்.

திருப்பம்

ஒத்திவைப்பு பிரேரணைகளை முன்வைக்க விரும்பும் உறுப்பினர்கள், அவர்களுடைய கட்சி பிரதிநிதிகளின்மூலமாக பாராளுமன்ற அலுவல்கள் குழுவிடம் சமர்ப்பித்து முன்னராகவே அனுமதியைப் பெற வேண்டியிருப்பது ஒரு புதிய திருப்பமாகும்.

பாராளுமன்ற அலுவல்கள் குழுவினால் யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டால், அது தொடர்பான விவாதத்துக்கு ஒரு திகதி நியமிக்கப்படும். எனவே, மேற்கூறப்பட்ட நடைமுறை பின்பற்றப்படாது. தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பாலும் இம்முறைமையே பின்பற்றப்படுகின்றது.