மலையக மண்ணின் முதல் தியாகியான முல்லோயா கோவிந்தன் வாழ்ந்த தோட்டத்துக்கு இன்று நேரில் சென்றிருந்தேன்.அத்தோட்டத்திலுள்ள முதியவர்களின் உதவியோடு,1939 டிசம்பரில் சம்பள உயர்வு போராட்டம் நடைபெற்ற பகுதி, முல்லோயா கோவிந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம், அவர் வாழ்ந்த வீடு ஆகியவற்றை பார்வையிட்டேன்.

அதுமட்டுமல்ல, வீரம் முளைத்த அந்த மண்ணின் இன்றைய நிலை குறித்தும் ஆராய்ந்தேன்.

முல்லோயாவில் வாழும் இன்றைய சந்ததியினருக்கு கோவிந்தன் என்றால் யாரென்றெ தெரியவில்லை. அவரின் நினைவாக அமைக்கப்பட்ட கல்லறையும் பராமரிப்பு ஏதுமின்றி காட்சிதருகின்றது.

எனவே, மலையகத்தின் முதல் தியாகியான கோவிந்தனை நினைவுகூரும் வகையில், அவரின் பெயரில் வாசிகசாலையொன்றை அமைத்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முல்லோயா போராட்டத்தின் வரலாறு….

மலையக மக்கள் போராடத்தெரியாதவர்கள், கைகட்டி, வாய்பொத்தி ஆமாம்சாமி போடும் அடிமைகள் என்றெல்லாம் ஏளனமாக விமர்சிப்பவர்களுக்கு எம்மக்களின் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

செய்யும் தொழில்மீதான பற்றும், வழிநடத்தும் தலைமைகள்மீது அவர்கள் வைத்த நம்பிக்கையும் மனிதகுலத்தின் உயர் பண்புகளாகும். ஆனால், அவற்றையே அடிடைச்சங்கிலியாக பயன்படுத்தி மக்களை முடக்கியமை உச்சகட்ட துரோகமாகும்.

இருந்தும் தொழிற்சங்கப்போராட்டமாக இருந்தால் என்ன, ஈடுவிடுதலைப்போராட்டமாக இருந்தால் என்ன அனைத்திலும் எம்மவர்களுக்கும் பங்குண்டு என்பதை பெருமையுடன் கூறிவைக்க விரும்புகின்றோம்.

அந்தவகையில் மலையக தொழிற்சங்கப் போராட்ட வரலாற்றில் முதல் தியாகியான முல்லோயா கோவிந்தனை என்றுமே நாம் மறந்திடமுடியாது.

1939 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கண்டி மாவட்டத்திலுள்ள ஹேவாஹெட்ட, முல்லோயாத் தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வுகோரி போராட்டத்துக்கு பிள்ளையார்சுழிபோட்டனர்.

காலை ஆறு மணிமுதல் மாலை ஆறுமணிவரை வேலைசெய்யமுடியாது, சம்பளமானது 16 சதம் அதிகரிக்கப்படவேண்டும் என்பது உட்பட 6 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டடே அறவழிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 13 நாட்கள் போராட்டம் தொடர்ந்ததால் தோட்ட நிர்வாகம் விழிபிதுங்கி நின்றது.

போராட்டத்தை ஒடுக்குவதற்கும், திசைதிருப்புவதற்கும் எலும்புத்துண்டுகளை அள்ளிவீச நிர்வாகம் சதித்திட்டம் தீட்டினாலும் எவருமே விலைபோகவில்லை. இதனால், பேச்சுவார்த்தைக்கு பச்சைக்கொடி காட்டியது தோட்டநிர்வாகம். இதில் உண்மை, நேர்மை இருக்கவில்லை.

தொழிலாளர்கள் போராட்டத்தைக்கைவிட்டபின்னர், காக்கிச்சட்டை கும்பல் தோட்டத்துக்குள் புகுந்து அடாவடியில் இறங்கியது. இதில் கோவிந்தனின் உயிர் பறித்தெடுக்கப்பட்டது.

1939 டிசம்பர் மாதம் போராட்டம் ஆரம்பமானது. 1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி கோவிந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார்.