கொழும்பு துறைமுகத்தை இந்தியா, ஜப்பான், இலங்கை அரசாங்கங்கள் இணைந்து கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக, ஜப்பானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பூகோள வணிகத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் என்பதால், கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிக்கவும், தெற்காசியாவைச் சுற்றி கடல்போக்குவரத்தை அதிகரிக்கவும், மூன்று நாடுகளின் அரசாங்கங்களும் முடிவு செய்துள்ளன.

பாதை மற்றும் அணை திட்டத்தைப் பயன்படுத்தி பிராந்தியத்தில் சீனா தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில்,  ஜப்பான் தனது சுதந்திர மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கை வகிக்க விரும்புகிறது என்றும் ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில், மூன்று நாடுகளும் கோடை காலத்தில் கையெழுத்திடும் என்றும், வரும் மார்ச் மாதம் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் தென்பகுதியில் உள்ள  கிழக்கு கொள்கலன் முனையத்தையே மூன்று நாடுகளும் இணைந்து அபிவிருத்தி செய்யவுள்ளன.பாரிய கொள்கலன் கப்பல்கள் நுழையும் வகையில் இந்த முனையம் அபிவிருத்தி செய்யப்படும்.இது தொடர்பாக மூன்று நாடுகளின் அதிகாரிகளும், பேச்சுக்களை நடத்தி வருகிறார்கள்.