மலையகத்தின் இதயம் என விளிக்கப்படும் நுவரெலியா மாவட்டமே மலையகத் தமிழர்களின் அரசியல் கோட்டையாகவும் திகழ்கின்றது. அந்த மாவட்டத்தில் இருந்தே கூடுதலான மலையக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிஉயர் சபைக்கு தெரிவாகின்றனர்.

மாகாண சபை, உள்ளாட்சி மன்றங்கள் ஆகியவற்றிலும் ஏனைய  மலையக மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கூடுதலான உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஏன்! சபைத் தவிசாளர் பதவிகளைக்கூட அலங்கரிக்கின்றனர். எனவே, நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவேண்டியது – அதிகரித்துக்கொள்ளவேண்டியது தமிழ் மக்களின் கூட்டுப்பொறுப்பாகும்.

இவ்வாண்டுக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலிலும் பிரதான அரசியல் கட்சிகளிலும், சுயேட்சைக்குழுக்களிலும் தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி அமரர் சந்திரசேகரன் வெற்றிபெற்றதுபோல், அவரின் மகளான அனுசா சந்திரசேகரன் இம்முறை சுயேட்சையாக களமிறங்கியுள்ளார்.

முதலாவது பாராளுமன்றத்தில்
நுவரெலியா தமிழ்ப் பிரதிநிதித்துவம்……

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் (சனப் பிரதிநிதிகள் சபை) 1947 ஆகஸ்ட் 23 முதல் 1947 செப்டம்பர் 20 வரை 19 நாட்கள் நடைபெற்றது.

சுதந்திரப்போராட்டத்துக்கு அரசியல் ரீதியில் தலைமைத்துவம் கொடுத்த டி.எஸ். சேனாநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, என்.எம். பெரேரா தலைமையிலான லங்கா சமசமாஜக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிற்கட்சி, போல்ஷேவிக் லெனின் கட்சி, கம்யூனிஸ் கட்சி மற்றும் சுயேட்சை குழுக்கள் ஆகியன தேர்தலில் களமிறங்கின.

இலங்கை இந்திய காங்கிரஸின் சார்பில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமான், 9 ஆயிரத்து 386 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

தலவாக்கலை தொகுதியில் களமிறங்கிய சீ.வி. வேலுபிள்ளை 10 ஆயிரத்து 645 வாக்குகளையும், கொட்டகலைத் தொகுதியில் போட்டியிட்ட கே. குமாரவேலு 6 ஆயிரத்து 722 வாக்குகளையும்,  மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் களமிறங்கிய ஜீ.ஆர். மோத்தா 9 ஆயிரத்து 86 வாக்குகளையும் பெற்று சபைக்கு தெரிவாகினர்.

( 1978 இற்கு பின்னரே  மாவட்ட அடிப்படையிலான விருப்பு வாக்கு விகிதாசாரமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, அதற்கு முன்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களெல்லாம் தொகுதி அடிப்படையிலேயே நடைபெற்றது.)

பொதுத்தேர்தலின் பின்னர் அமைந்த முதலாவது பாராளுமன்றத்திலேயே அதாவது 1948 இல் பிரஜா உரிமை சட்டத்தின்கீழ் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.அதன்பின்னர் தேர்தல் திருத்தச்சட்டமூலம் ஊடாக வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. இதனால் மலையகத் தமிழர்கள் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டனர்.

( 1950 களில்  இலங்கை குடியுரிமைகோரி விண்ணப்பித்தவர்களில் சிலருக்கு மாத்திரமே அனுமதி கிடைத்தது. அதன்பின்னர் 1964 இல் கைச்சாத்திடப்பட்ட சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. எனினும், வாக்குரிமையை முழுமையாக பெறுவதற்கு 1988வரை போராடவேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.)

இலங்கையில் 2 ஆவது பொதுத்தேர்தல் 1952 மே 24 ஆம் திகதி முதல் 30 வரை 4 நாட்கள் நடத்தப்பட்டன. இலங்கை, இந்திய காங்கிரஸ் போட்டியிடவில்லை. நுவரெலியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட தமிழர் ஒருவர் தோல்வியை தழுவினார்.

1956 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்துக்கு தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. எவரும் களமிறங்கவில்லை.
இலங்கையில் 4ஆவது பொதுத்தேர்தல் 1960 மார்ச் 19 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்றும் ஜனவரி 4ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்படும்.1960இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

தொகுதி நிர்ணயம்………..

இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் 95 பேர் வாக்களிப்பு ஊடாகவும், அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர். சபையில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

எனினும் 1959 இல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இலங்கையை 145 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்தது. இதில் 140 தொகுதிகள் தனி அங்கத்துவ தொகுதிகளாகவும், நான்கு தொகுதிகள் இரட்டை அங்கத்துவ தொகுதிகளாகவும், மத்திய கொழும்பு மூன்று அங்கத்துவ தொகுதியாகவும் வரையறுக்கப்பட்டது.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆகநீடித்தது.

இதன்படி மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரித்தது. (140+8+3 +6).

நுவரெலியா தொகுதியில்  போட்டியிட்ட தொண்டமான் ஆயிரத்து 940 வாக்குகளையும், மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்ட  வீ.கே. வெள்ளையன் ஆயிரத்து 349 வாக்குகளையும் பெற்றனர். எனினும், வெற்றிபெறமுடியவில்லை.

4ஆவது பொதுத்தேர்தல் நடைபெற்று 24 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. (1960 ஏப்ரல் 23 ஆம் திகதி) 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் மலையகத் தமிழர் எவரும் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவில்லை.

வெள்ளையன், சி.வி. வேலுபிள்ளை
சுயேட்சையாக போட்டி

அதன்பின்னர் 1965 ஜுலை 20 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்தில் எவரும் வெற்றிபெறவில்லை. என். சிவஞானம் என்பவர் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். ( பெற்றவாக்குகள் – 87)

1970 மே 27 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், இ.தொ.காவில் இருந்து வெளியேறி தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவிய வெள்ளையனும், சிவி வேலுபிள்ளையும் மஸ்கெலியா, நுவரெலியா ஆகிய தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட்டனர். எனினும், வெற்றிபெறவில்லை.

1960, 65 களில் சுக மற்றும் ஐ.தே.க. ஆட்சிகளின்போது தொண்டமானுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது. எனினும், 70 இல் அந்த வாய்ப்பு ஶ்ரீமாவால், அசீசுக்கு வழங்கப்பட்டது.

இ.தொ.கா. சாதனை

1977 இல் நடைபெற்ற தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. நுவரெலியா தொகுதியில் 35 ஆயிரத்து 743 வாக்குகளைப் பெற்று வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார். 1947 இற்கு பிறகு வாக்குரிமைமூலம் மலையக பிரதிநிதியொருவர் பாராளுமன்றம் சென்ற சந்தர்ப்பம் இதுவாகும்.

1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி  நடைபெற்ற இலங்கையின் முதலாவது  ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் – ஜே.ஆர். ஜயவர்தன, டிசம்பர் 22 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி பாராளுமன்ற ஆயுட்காலத்தில் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு நீடித்தார்.

இதனால் 1988 ஆம் ஆண்டுவரை பொதுத்தேர்தல் நடைபெறவில்லை. அதன்பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் விருப்பு  விகிதாசார தேர்தல் முறையிலேயே நடைபெற்றது. மாவட்ட அடிப்படையில் 196 பேர் வாக்களிப்பு மூலம், 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.

1989 பெப்ரவரி 15 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் யானை சின்னத்தின்கீழ் போட்டியிட்டது. இ.தொ.காவின் வேட்பாளர் முத்து சிவலிங்கம், வீ. அண்ணாமலை ஆகியோரும் தோல்வியைத் தழுவினர். எனினும், ஐ.தே.க. ஆட்சியில் இ.தொ.காவுக்கு இரண்டு தேசியப்பட்டியல்கள் வழங்கப்பட்டன.

சௌமியமூர்த்தி தொண்டமானும், பிபி தேவராஜும் பாராளுமன்றம் சென்றனர். அமைச்சரவையிலும் இடம்பிடித்தனர்.நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கவே வெற்றிபெற்றது.

1994 இல் தீர்மானிக்கும் சக்தியாகமாறிய சந்திரசேகரன்

நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்ட சந்திரசேகரனாலும் வெற்றிபெறமுடியாமல்போனது.1994 ஆகஸ்ட் 16 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தே இ.தொ.கா. போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் இ.தொ.கா. பட்டியலில் போட்டியிட்ட முத்து சிவலிங்கம் 85 ஆயிரத்து 490 வாக்குகளையும், சுப்பையா சதாசிவம் 83 ஆயிரத்து 368 விருப்பு வாக்குகளையும், ஆறுமுகன் தொண்டமான் 75 ஆயிரத்து 297 விருப்பு வாக்குகளையும் பெற்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் சுயேட்சையாக களமிறங்கிய மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் 23,453 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணி 14 போனஸ் ஆசனங்கள் சகிதம் 105 ஆசனங்களே கைவசம் இருந்தன. இந்நிலையில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேசக்கரம் நீட்டியது. (6+1) ஏழு ஆசனங்கள்.

இதனால் ஆட்சியமைப்பதற்கு (113) சந்திரிக்காவுக்கு மேலுமொரு ஆசனம் (எம்.பியின் ஆதரவு) தேவைப்பட்டது.

இதன்போதே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக சந்திரசேகரன் உருவெடுத்தார். சந்திரிக்காவுக்கு ஆதரவு வழங்கினார். பின்னர் பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.

தேர்தலின் பின்னர் மக்கள் கூட்டணியில் இணைந்துகொண்ட இ.தொ.காவின் தலைவருக்கு சந்திரிக்காவின் அமைச்சரவையில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பதவி வழங்கப்பட்டது.

இத்தேர்தலிலும் நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கவே போட்டியிட்டது. பொதுஜன முன்னணியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். செளமியமூர்த்தி தொண்டமானுக்கும் ஐ.தே.க. ஊடாக தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது.

தொண்டா, சந்திரசேகரன், முத்து ஓரணியில்…

2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணியே வெற்றிபெற்றது. மக்கள் கூட்டணிக்கே இ.தொ.கா. ஆதரவு வழங்கி, அதன்கீழ் போட்டியிட்டது. ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றனர். ஐ.தே.கவின் சார்பில் போட்டியிட்ட சந்திரசேகரனும், சதாசிவமும் வெற்றிபெற்று சபைக்கு தெரிவானார்கள்.

எனினும், ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து யானை சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிட்டது.

நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான் 121,542 விருப்பு வாக்குகளையும், பெ. சந்திரசேகரன் 121,421 விருப்பு வாக்குகளையும், முத்து சிவலிங்கம் 107,338 விருப்பு வாக்குகளையும் பெற்றனர்.பொதுஜன பெரமுனவில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். எஸ். சதாசிவத்துக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது.

ஐ.தே.கவுடன் இணைந்தே நுவரெலியாவில் இ.தொ.கா. போட்டியிட்டது. வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள்,ஆறுமுகன் தொண்டான் – 99,783முத்து சிவலிங்கம் – 85,708கே. ஜெகதீஸ்வரன் – 81,386தேர்தலின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இ.தொ.கா. இணைந்துகொண்டது.

தனித்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு 42,582 வாக்குகளைப் பெற்று சந்திரசேகரன் வெற்றிபெற்றார்.

2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தே இ.தொ.கா. போட்டியிட்டது.  நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய ஆறுமுகன் தொண்டமான் 60 ஆயிரத்து 997 வாக்குகளையும், ராதாகிருஷ்ணன் 54 ஆயிரத்து 83 வாக்குகளையும், ராஜதுரை 49 ஆயிரத்து 228 வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றனர். முத்து சிவலிங்கத்துக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. 2010 வெற்றியை கூட்டணியே நுவரெலியாவைக் கைப்பற்றியது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட பழனி திகாம்பரம் 39 ஆயிரத்து 490 வாக்குகளையும், ஶ்ரீரங்கா 33 ஆயிரத்து 948 வாக்குகளையும் பெற்று சபைக்கு தெரிவாகினர். வெற்றிபெற்ற பின்னர் இருவரும் மஹிந்த பக்கம் தாவினர்.

இ.தொ.கா, முற்போக்கு கூட்டணிக்கிடையே கடும் போட்டி

அதேவேளை, 2015 ஓகஸ்ட் 17 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் போட்டி நிலவியது. இ.தொ.காவுக்கு கடும் போட்டியாக – சவாலாக முற்போக்கு கூட்டணி உருவெடுத்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இரண்டு ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியது. ஆறுமுகன் தொண்டமான் 61 ஆயிரத்து 987 வாக்குகளையும், முத்து சிவலிங்கம் 45 ஆயிரத்து 352 வாக்குகளையும் பெற்று பெற்றிபெற்றனர். மூன்றாவது வேட்பாளர் தோல்வியை தழுவினார்.

யானை சின்னத்தில் போட்டியிட்ட பழனி திகாம்பரம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து  528 வாக்குகளையும், வீ. இராதாகிருஷ்ணன் 87 ஆயிரத்து 375 வாக்குகளையும், எம். திலகராஜ் 67 ஆயிரத்து 761 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றம் தெரிவானார்கள்.

எழுத்து ஆர்.சனத்

தகவல்மூலம் – தேர்தல் ஆணைக்குழுவின்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்,
பாராளுமன்ற இணையத்தளம்.

 

இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் -1947

இலங்கையின் 2ஆவது பொதுத்தேர்தல்- 1952

 

இலங்கையின் 3ஆவது பொதுத்தேர்தல் – 1956!

உலகின் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய தேர்தல் – 1960