1960 மார்ச் 19 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் ஆட்சியமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை பெறாததால் 50 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்த ஐக்கிய தேசியக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.

பிரதமராக டட்லி சேனாநாயக்க பதவியேற்றார்.1960 மார்ச் 30ஆம் திகதி பாராளுமன்றம் கூடியது.சபாநாயகர் தேர்வின்போது ஆளுங்கட்சியால் நிறுத்தப்பட்ட வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டு – எதிரணி சார்பில் முன்மொழியப்பட்டவர் வெற்றிபெற்றார்.

இலங்கையின் அப்போதைய ஆளுநர் நாயகமாக இருந்த சேர். ஓலிவர் குணதிலக்கவின் சிம்மாசன உரை வாக்கெடுப்புக்குவிடப்பட்டபோது அது தோற்கடிக்கப்பட்டது.

இதனால் 24 நாட்களுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. (1960 ஏப்ரல் 23 ஆம் திகதி) 1960 ஜீலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டில் 1947, 1952, 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது தேர்தல் திகதியாக மூன்றிற்கும் மேற்பட்ட நாட்கள் அறிவிக்கப்பட்டுவந்த நிலையில் 1960 மார்ச்சில் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போதே ஒரே நாளில் வாக்களிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன், மூன்று தேர்தல்களிலும் 95 பேர் வாக்களிப்பு ஊடாகவும், அறுவர் நியமன உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.சபையில் மொத்தம் 101 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர்.

எனினும் 1959 இல் தொகுதிகளை நிர்ணயிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, இலங்கையை 145 தேர்தல் தொகுதிகளாக நிர்ணயித்தது.

இதில் 140 தொகுதிகள் தனி அங்கத்துவ தொகுதிகளாகவும் ,நான்கு தொகுதிகள் இரட்டை அங்கத்துவ தொகுதிகளாகவும், மத்திய கொழும்பு மூன்று அங்கத்துவ தொகுதியாகவும் வரையறுக்கப்பட்டது.நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை 6ஆக நீடித்தது.

இதன்படி மொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 101 இலிருந்து 157 ஆக அதிகரித்தது. (140+8+3 +6) 5ஆவது பாராளுமன்ற தேர்தலிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

பிரசார யுக்தி…..

டட்லி சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி களமிறங்கி தீவிர பரப்புரைகளை முன்னெடுத்தது.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைக்கு சி.பி.டி. சில்வா பொறுப்பேற்றிருந்தாலும், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரும் களத்தில் இறங்கி – தனது கணவரான பண்டாரநாயக்கவின் திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க மக்களிடம் அனுமதி கோரினார்.

இத்தேர்தலில் 10இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. சுயேட்சையாகவும் பலர் களமிறங்கினர்.

37 இலட்சத்து 24 ஆயிரத்து 507 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தாலும், 28 இலட்சத்து 27 ஆயிரத்து 75 பேரே வாக்குரிமையை பயன்படுத்தினர். மொத்த வாக்களிப்பு வீதமானது 75.9 ஆக அமைந்திருந்தது. 22 ஆயிரத்து 235 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 10 இலட்சத்து 22 ஆயிரத்த 154 வாக்குகளைப் பெற்று 75 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 30 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக்கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின.

லங்கா சமசமாஜக்கட்சி 12 ஆசனங்களையும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி 4 ஆசனங்களையும், மக்கள் ஐக்கிய முன்னணி 3 ஆசனங்களையும், இலங்கை ஜனநாயகக்கட்சி, தேச விமுத்தி பெரமுன ஆகியன தலா 3 ஆசனங்களையும் பெற்றன.

தமிழ் காங்கிரஸ் ஒரு ஆசனத்தை தக்கவைத்துக்கொண்டது.
தேர்தலில் அமோக வெற்றிபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சிபீடமேற தகுதிபெற்றது.

உலகின் முதல் பெண் பிரதமர்….

ஐந்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1960 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெற்றது. உலகின் முதல் பெண் பிரதமராக ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க பதவியேற்றார். புதிய அமைச்சரவையும் உருவாக்கப்பட்டது.

ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கமும் தேசியவாதத்துக்கே முன்னுரிமை வழங்கியது.

தனியார் பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டதுடன், இடைநிறுத்தப்பட்டிருந்த தனிசிங்கள மொழி சட்டமும் மீள நடைமுறைப்படுத்தப்பட்டது.

1947- 1948 இல் குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டதால் அரசியல் ரீதியில் அநாதைகளாக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கு ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது.

ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம்

இதற்காக 1964 ஒக்டோபர் 30 ஆம் திகதி இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையின் பிரதமராக இருந்த ஶ்ரீமாவும், இந்தியாவின் பிரதமராக பதவிவகித்த லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்டனர். (ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம்)

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

10 இலட்சம்பேரில் மீதமிருந்த ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேரில் 50 வீதமானோரை இந்தியாவும், 50 வீதமானோரை இலங்கையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என 1974 இல் மற்றுமொரு ஒப்பந்தம் (சிறிமா – இந்திரா) செய்துகொள்ளப்பட்டது.

இரு அரசுகளினதும் இந்த நடவடிக்கைகளானவை பாரிய மனித உரிமைமீறல்களாகவே விமர்சிக்கப்பட்டது. சந்தையில் பொருட்களை விற்பதுபோல் மக்களை பங்கிட்ட அணுகுமுறை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.

ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தமானது மலையகத் தமிழர்களின் வாழ்வில் பெருந்துயரை ஏற்படுத்திய சம்பவமென்றே கூறவேண்டும். சொந்தங்களை இங்கு தவிக்கவிட்டுவிட்டு பாதி பேர் இங்கும், சொந்தங்களை பிரிந்த சோகத்தில் மீதமுள்ளோர் இங்கும் வாடினர்.

மலையகத் தமிழர்களுக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிமீது இன்றளவிலும் அதிருப்தி இருப்பதற்கு இதுவும் ஓர் பிரதான காரணமாகும்.

மறுபுறத்தில் ஶ்ரீமாவின் மக்கள் மயக்கொள்கைக்கு எதிர்ப்புகள் வலுத்தமை, கட்சிதாவல்கள் உட்பட மேலும் சில காரணங்களால் பல நெருக்கடிகளையும் அவரது அரசாங்கம் எதிர்கொண்டது.

தனால் நான்காண்டுகள் கடந்த நிலையில் 1964 செப்டம்பர் 17 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

1965 மார்ச் 22 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிபெற்றது.

எனினும், மக்கள் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1970 இல் ஐ.தே.க. ஆட்சியை வீழ்த்திய சிறிமாவின் நகர்வு உட்பட ஆறாவது பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பதிவு விரைவில்……..

ஆர். சனத்

தகவல்மூலம் – தேர்தல் ஆணைக்குழு இணையத்தளம், பாராளுமன்ற இணையத்தளம், வரலாற்று நூல்கள்.

படங்கள் – இணையத்தளம்

இலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தல் தொடர்பான தொகுப்பு

இலங்கையின் 4ஆவது பொதுத்தேர்தல் – 1960