வடக்கிலுள்ள தமிழ்ப் பிரிவினைவாத வாக்குகளும், கிழக்கிலுள்ள முஸ்லிம் அடிப்படைவாத வாக்குகளும் கிடைத்திருக்காவிட்டால் சஜித் பிரேமதாச 29 இலட்சம் வாக்குகளால் மண்கவ்வியிருப்பார்.

சஜித்தை ஏற்பதற்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மக்கள் தயாரில்லை – என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஐக்கிய தேசியக்கட்சிபோல்,தாய்நாட்டுக்கு தீங்குவிளைவித்த வேறெந்த கட்சியும் இலங்கையில் கிடையாது. அதற்கான கர்மவினை – அக்கட்சிக்கு இன்று தண்டனை வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இந்நாட்டு மக்கள் அடியாடு நிராகரித்துள்ளனர்.

இனி அவருக்கு அரசியல் பயணம் இல்லை.தலைமைப்பதவிக்கும் வரமுடியாது. செல்லாக்காசாகிவிட்டார் என்றே கூறவேண்டும்.

ரணில் விக்கிரமசிங்கவின் ஆசியுடன் தலைமைப்பதவிக்கு வந்துவிடலாம் என்ற கோஷத்துடன் சஜித் வந்தார். என்ன நடந்தது? வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் கிடைத்திருக்காவிட்டால் படு மோசமான தோல்வி ஏற்பட்டிருக்கும் என வஜீர அபேவர்தன கூறுகிறார்.

ஆக – வடக்கு மாகாணத்தில் தமிழ் பிரிவினைவாத வாக்குகளும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் அடிப்படைவாத வாக்குகளும் கிடைத்திருக்காவிட்டால் 29 இலட்சம் வாக்குகளால் சஜித் மண்கவ்வியிருப்பார்.

அதாவது இந்த நாட்டில் பெரும்பான்மையி மக்களுக்கு சஜித் போன்றோர்மீது கடுகளவேனும் நம்பிக்கையில்லை.

எனவே, அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.இதனை யாராலும் தடுக்க முடியாது.

தாய்நாட்டுக்கு துரோகமிழைக்கும், கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களை சீரழிக்கும் அரசாங்கம் இருந்தால் மட்டுமே இந்நாட்டுக்கு எதிர்க்கட்சி தேவைப்படும்.

ஆனால், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தலைமையிலான இந்த அரசாங்கம் தாய்நாடுமீது அதிக பற்றுவைத்துள்ளது.

ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு உட்பட இந்த அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களே இதற்கு சான்றாகும். எனவே, நாட்டுக்கு எதிர்க்கட்சிக்கான தேவை இல்லை.” என்றும் அவர் கூறினார்.