உலக்கிண்ண அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

மழையால் நேற்று பாதிக்கப்பட்ட இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் அரையிறுதிப் போட்டி, நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து (46.1ஓவர்) இன்று மீண்டும் ஆரம்பமானது.

இதன்படி 50 ஓவர்கள் நிறைவில் நியூசிலாந்து அணி 239 ஓட்டங்களைக் குவித்தது. இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 240 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, வீராட் கோஹ்லி, கே.எல்.ராகுல் ஆகியோர் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 5 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஏனைய வீரர்களும் பிரகாசிக்க தவறினர்.

எனினும், டோனி, ஜடேஜா ஆகியோர் 6 ஆவது விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

குறித்த ஜோடி சதம் கடந்தது. 77 ஓட்டங்களுடன் ஜடேஜா ஆட்டமிழக்க இந்திய அணிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோனி இறுதி கட்டத்தில் அதிரடி காட்டினாலும் வெற்றி கைநழுவிப்போனது.