” இலங்கையில் இன்னும் நான்கு மாதங்களில் ஆட்சிமாற்றம் ஏற்படும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று ( 21) அடித்துக்கூறினார்.

தேசிய சுதந்திர முன்னணியால் விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” 21/4 தாக்குதல் தொடர்பில் பொறுப்புகூறும் கடப்பாட்டிலிருந்து அரசாங்கம் தப்பிக்க முயற்சிக்கின்றது. இதன்காரணமாகவே எல்லா பொறுப்பையும் அதிகாரிகள்மீது திணிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.

21/4 தாக்குதலால் முஸ்லிம் மக்களே இன்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடிப்படைவாதிகளை புனர்வாழ்வுக்குட்படுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்தோம். இன்று நிம்மதி பறிபோயுள்ளது. எனவே, நாட்டை நேசிக்கும் தலைவரொருவர் அவசியம். இன்னும் 4 மாதங்களில் இந்த அரசின் ஆயுட்காலம் முடிவடைந்துவிடும்.

எந்த தேர்தல் வந்தாலும் நாம் வெற்றிபெறுவது உறுதி. எமது ஆட்சியின்கீழ் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.” என்றார் மஹிந்த.