மட்டக்களப்பு – பொலனறுவை வீதியின் வெலிக்கந்தைப் பகுதியில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வேன் ஒன்றும் உளவு இயந்திரம் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உளவு இயந்திரத்தில் பயணித்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், உயிரிழந்த ஐவரில் நால்வர் பெண்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்த 12 பேரும் பொலனறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சம்பவம் தொடர்பில் வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொசன் பெரஹர பார்த்துவிட்டு திரும்புகையிலேயே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். உளவு இயந்திரத்தில் 17 பேரும், வேனில் நான்கு பேரும் பயணித்துள்ளனர்.